ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணியின் சோகம் இன்னும் தொடர்கிறது. 

முதல் 6 போட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்பின்னர் அந்த வெற்றி முகத்தை தொடர நினைத்த ஆர்சிபிக்கு, அடுத்த அடி விழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. இனிமேல் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்பேயில்லை. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, டிவில்லியர்ஸ் மற்றும் மொயின் அலியின் பொறுப்பான அதிரடி பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 171 ரன்களை குவித்தது. 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அவர்களின் விக்கெட்டுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி, மிடில் ஓவர்களில் சற்று மந்தமாக ஆடினாலும், ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி 19வது ஓவரிலேயே போட்டியை முடித்துவைத்தார். 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இலக்கை விரட்டிய மும்பை அணியில், கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடிதான் மும்பை அணியை வெற்றி பெற செய்தது. ஹர்திக் பாண்டியா - பொல்லார்டு என பவர் ஹிட்டர்கள் இருவரும் களத்தில் இருந்த நிலையில், 19வது ஓவரை ஸ்பின்னர் பவன் நேகி வீசினார். ஸ்பின் பவுலிங்கை அதிரடியாக அடித்து நொறுக்கக்கூடிய இரண்டு வீரர்கள் களத்தில் இருந்த நிலையில் ஸ்பின் பவுலரிடம் 19வது ஓவர் கொடுக்கப்பட்டது. 

அதற்குக் காரணம், நேற்றைய போட்டியில் பந்து நன்றாக சுழன்றது. ஸ்பின்னர்களால்தான் மும்பை அணியின் ரன்ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் களத்தில் நின்ற இருவரும் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், இடது கை ஆஃப் ஸ்பின்னரான நேகியிடம் பந்தை கொடுக்குமாறு பவுலிங் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, டக் அவுட்டில் இருந்து அறிவுறுத்தினார். நெஹ்ராவின் யோசனை சரியானதுதான் என்றாலும், களத்தில் நின்ற இருவருமே டெத் ஓவர்களில் அதிலும் குறிப்பாக ஸ்பின் பவுலிங்கை தாறுமாறாக அடிக்கக்கூடியவர்கள். எனவே கொஞ்சம் யோசித்திருக்கலாம். ஆனால் வேறு ஃபாஸ்ட் பவுலரை போட வைத்திருந்தால் கூட கடைசி ஓவரில் தான் போட்டி முடிந்திருக்கும். நேகியை போடவைத்ததும், ஒரே ஓவரில் 22 ரன்களை குவித்து 19வது ஓவரிலேயே போட்டியை முடித்துவிட்டார் ஹர்திக் பாண்டியா. 

இதையடுத்து 19வது ஓவரை நேகியை போடவைக்குமாறு வலியுறுத்திய பவுலிங் பயிற்சியாளர் நெஹ்ராவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பயங்கரமாக கிண்டலடித்துவருகின்றனர்.