ஐபிஎல் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இரு அணிகளுமே முதல் போட்டியில் தோற்றதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. 

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோலி, மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் சிறப்பாக தொடங்கினர். எனினும் டி காக், 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் யுவராஜ் சிங்கும் இணைந்து அதிரடியாக ஆடினர். சாஹல் வீசிய 14வது ஓவரில் யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ், 24 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து பெரிய இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யத்தவறி ஆட்டமிழந்துவிட்டார். 

அதன்பிறகு குருணல் பாண்டியா, மெக்லநெகன், மார்கண்டே என விக்கெட்டுகள் ஒருமுனையில் சரிய, மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 14 பந்துகளில் 32 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் மொயின் அலி மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். பவுண்டரி, சிக்ஸர் என அதிரடியாக தொடங்கிய மொயின் அலியை 13 ரன்களில் ரோஹித் சர்மா அபாரமாக ரன் அவுட் செய்து அனுப்பினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆர்சிபி கேப்டன் கோலி, அடித்து ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பார்த்திவும் அடித்து ஆட, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

22 பந்துகளில் 31 ரன்கள் அடித்த பார்த்திவ் படேலை மார்கண்டே போல்டாக்கி அனுப்பினார். பின்னர் கேப்டன் கோலியுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த அனுபவ ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியது. டிவில்லியர்ஸ் களத்திற்கு வந்த முதல் பந்திலேயே மார்கண்டேவின் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதை யுவராஜ் சிங் தவறவிட்டார். அதை பயன்படுத்தி கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் டிவில்லியர்ஸ். டிவில்லியர்ஸ் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் ஒன்றிரண்டு ஷாட்டுகளை அடித்த பின்னர், நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஆட ஆரம்பித்தார். 

46 ரன்கள் அடித்த கோலியை பும்ரா வீழ்த்தினார். பின்னர் ஹெட்மயரையும் பும்ரா வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் டிவில்லியர்ஸின் அதிரடியால் இலக்கு எட்டக்கூடியதாகவே இருந்தது. சிறப்பாக ஆடிய டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்தார். கடைசி 2 ஓவர்களில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை பும்ரா வீசினார். 

19வது ஓவரின் ஒரு வைடுடன் சேர்த்து மொத்தமாகவே வெறும் 5 ரன்கள் மட்டும் கொடுத்த பும்ரா, கோலின் டி கிராண்ட் ஹோமின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து கடைசி ஓவரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபவ பவுலர் மலிங்கா அந்த ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஷிவம் துபே சிக்ஸர் அடித்தாலும் அதன்பின்னர் சுதாரித்து வீசிய மலிங்கா, டிவில்லியர்ஸை அடிக்கவிடாமல் சாமர்த்தியமாக பந்துவீசி கட்டுப்படுத்தினார். டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்து களத்தில் இருந்தும்கூட அவரை பெரிய ஷாட் அடிக்க முடியாமல் நிராயுதபாணியாக நிற்க வைத்தார் மலிங்கா. கடைசி ஓவரில் ஆர்சிபி அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

ஆர்சிபி அணி இந்த சீசனை அது எதிர்பார்த்ததுபோல் தொடங்கவில்லை.  முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்று தோல்வி முகத்துடன் இந்த சீசனை தொடங்கியுள்ளது.