ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

முதல் போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ், இந்த போட்டியில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.

டி காக் 2வது ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், களமிறங்கியது முதலே அடித்து ஆட தொடங்கினார். சந்தீப் வாரியர் வீசிய 3வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார். ஹாட்ரிக் உட்பட மொத்தம் 4 பவுண்டரிகளை அந்த ஓவரில் விளாசினார்.

சூர்யகுமார் ஒருமுனையில் பவுண்டரிகளை விளாச, மறுமுனையில் ரோஹித் சர்மா தனக்கே உரித்தான ஸ்டைலில் புல் ஷாட்டுகளில் மிட் விக்கெட் திசையிலும், கவர் திசையிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். ரோஹித்தும் சூர்யகுமாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 90 ரன்களை குவித்தனர்.

சூர்யகுமார் யாதவ் 11வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 28 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க, அவருடன் ஜோடி சேர்ந்த சவுரப் திவாரி ஒருசில நல்ல ஷாட்டுகளை ஆடினார். ஆனால் 21 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். 

சிக்ஸர்களை பறக்கவிட்டு அபுதாபியில் சிக்ஸர் மழை பொழிந்த ரோஹித் சர்மா, 18வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். 54 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 80 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பையும், டெத் ஓவரில் தெறிக்கவிடும் வாய்ப்பையும் இழந்தார்.

18 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா, ரசலின் பவுலிங்கில் பந்தை அடிப்பதற்கு பதிலாக ஓவராக பின்னால் வந்து ஸ்டம்பை அடித்து ஆட்டமிழந்தார். பொல்லார்டு 7 பந்தில் 13 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 195 ரன்கள் அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 196 ரன்கள் என்ற கடினமான இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.