மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று போட்டி துபாயில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அஷ்வின் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் டி காக்கும் சூர்யகுமார் யாதவும் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ரன்ரேட்டை பத்துக்கு குறையவிடாமல் ஆடிய அதேவேளையில், விக்கெட்டையும் இழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.

அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 25  பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு டி காக்கும் சூர்யகுமாரும் இணைந்து 62 ரன்களை குவித்தனர். அடித்து ஆடி அரைசதம் அடித்த சூர்யகுமார் 38 பந்தில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரோஹித்தை போலவே பொல்லார்டும் டக் அவுட்டாக, க்ருணல் பாண்டியா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷனும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து டெல்லி கேபிடள்ஸின் பவுலிங்கை பொளந்து கட்டிவிட்டனர். டேனியல் சாம்ஸ் வீசிய 18வது ஓவரில் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர். ரபாடா வீசிய 19வது ஓவரில் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்கள் மற்றும் இஷான் கிஷன் ஒரு பவுண்டரியும் அடிக்க, நோர்க்யா வீசிய கடைசி ஓவரில் பாண்டியா 2 சிக்ஸர் அடித்துவிட்டு கடைசி பந்தை இஷான் கிஷனிடம் கொடுக்க, அவரும் தன் பங்கிற்கு சிக்ஸர் விளாசி இன்னிங்ஸை முடித்தார்.

இதையடுத்து 20 ஓவரில் 200 ரன்களை குவித்த மும்பை இந்தியன்ஸ் அணி 201 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்துள்ளது. கடைசி ஆறு ஓவரில் மட்டும் மும்பை அணி 92 ரன்களை குவித்தது. இஷான் கிஷன் 30 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ரன்களை விளாச, பாண்டியா 14 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார்.