மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். 3வது ஓவரிலேயே ரோஹித்தை 9 ரன்களுக்கு வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் ஷமி. இஷான் கிஷனும் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

அதன்பின்னர் டி காக்குடன் ஜோடி சேர்ந்த க்ருணல் பாண்டியா, பொறுப்புடனும் அதேநேரத்தில் பெரிய ஷாட்டுகளும் ஆடி டி காக்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடி 30 பந்தில் 34 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பெரியளவிலான இன்னிங்ஸ் இல்லையென்றாலும், அந்த பார்ட்னர்ஷிப், மும்பை இந்தியன்ஸ் இருந்த நிலைக்கு மிக முக்கியமானது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதமடித்த டி காக், 43 பந்தில் 53 ரன்களுக்கு 17வது ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழந்தார்.

டெத் ஓவர்களில் பொல்லார்டும் குல்ட்டர்நைலும் இணைந்து, மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்த்த ஸ்கோரை விட அதிக ரன்களை அடிக்க உதவினர். டெத் ஓவர்களில் வழக்கம்போலவே சிக்ஸர்களை விளாசி மிரட்டினார் பொல்லார்டு. அவரை தனியாக விடாமல், குல்ட்டர்நைலும் 4 பவுண்டரிகளுடன் 12 பந்தில் 24 ரன்கள் அடித்தார். அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசிய பொல்லார்டு, கிறிஸ் ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். 12 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 176 ரன்கள் அடித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு நிர்ணயித்துள்ளது.

ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வீழ்த்தி, ரன்களை கட்டுப்படுத்திய பஞ்சாப் அணி, வழக்கம்போலவே டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கி சொதப்பினர். மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி 3 ஓவரில் 54 ரன்களை குவித்தனர்.