ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் 2 போட்டிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் ஆடிவருகின்றன. 

மொஹாலியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - குயிண்டன் டி காக் ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய ரோஹித் சர்மா 18 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், வெறும் 11 ரன்களில் முருகன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 39 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அவுட்டானார். பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான வாய்ப்பு இருந்தும் டி காக் அதை பயன்படுத்தி கொள்ளவில்லை. 

யுவராஜ் சிங்கை 18 ரன்களில் முருகன் அஷ்வினும் பொல்லார்டை 7 ரன்களில் ஆண்ட்ரூ டையும் வீழ்த்தினர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா சில பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்களை குவித்தது.