ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

மாலை 4 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, வெறும் 5 ரன்களில் நடையை கட்டினார். 

அதன்பின்னர் டி காக்குடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சூர்யகுமார் நிதானமாக ஆடினார். அதேநேரத்தில் மறுமுனையில் டி காக் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்சருமாக விளாசிய டி காக் அரைசதம் கடந்தார். 

34 ரன்களில் சூர்யகுமார் அவுட்டாக, அவருக்கு பின்னாடியே 65 ரன்களில் டி காக்கும் வெளியேறினார். அதன்பின்னர் ஹர்திக் பாண்டியாவும் பொல்லார்டும் இணைந்து வெளுத்து வாங்குவார்கள் என்று நினைத்தால், அவர்களை ராஜஸ்தான் பவுலர்கள் கட்டுப்படுத்தி விட்டார்கள். பொல்லார்டு 10 ரன்களில் வெளியேற, பாண்டியாவிற்கு இரண்டு கேட்ச்களை ஆர்ச்சர் விட்டார். ஆர்ச்சரின் புண்ணியத்தில் 23 ரன்கள் அடித்த பாண்டியா, ஆர்ச்சரின் பந்திலேயே கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். பென் கட்டிங் இன்னிங்ஸின் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க, 161 ரன்களுடன் இன்னிங்சை முடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ஜெய்ப்பூர் ஆடுகளத்தில் 162 ரன்கள் என்பது சவாலான இலக்குதான். அதுமட்டுமல்லாமல் மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில் ராஜஸ்தானுக்கு வெற்றியை தேடித்தந்தவரும் அந்த அணியின் நட்சத்திர வீரருமான பட்லர், அவருக்கு குழந்தை பிறந்திருப்பதால் இங்கிலாந்து சென்றுவிட்டார். அதனால் இந்த போட்டியில் ஆடவில்லை. பட்லர் இல்லாத ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் என்பது சவாலான இலக்கு. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.