சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, அந்த வெற்றி முகத்தை தொடரும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் சிஎஸ்கே, பஞ்சாப், சன்ரைசர்ஸ், கேகேஆர் ஆகிய நான்கு அணிகளும் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
3 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்த சீசன் சிறந்ததாக அமையவில்லை. இந்த சீசனிலும் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது.
தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி, இதுவரை ஆடிய 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் எதிரும் புதிருமான அணிகள் என்பதால் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஃபாஸ்ட் பவுலிங் சிக்கலாக இருந்துவந்தது. மலிங்கா அணியில் இணைந்தபிறகு அந்த அணி உத்வேகமடைந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்ததால் ஆஸ்திரேலிய அணியின் இடது கை இளம் ஃபாஸ்ட் பவுலர் பெஹ்ரெண்டோர்ஃப் மும்பை அணியில் இணைந்துள்ளார். எனவே கூடுதல் உற்சாகத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, அந்த வெற்றி முகத்தை தொடரும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி குறித்தும் பொல்லார்டு குறித்தும் பேசியுள்ள அந்த அணி வீரர் குயிண்டன் டி காக், டி20 போட்டிகளை பொறுத்தமட்டில் முதல் 3-4 பேட்ஸ்மேன்களில் ஒருவர் கடைசி வரை களத்தில் நின்று ஆட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் ஆடிய 3 போட்டிகளிலும் அதை செய்ய தவறிவிட்டோம். ஆனால் எங்களது பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமாக வெகுண்டெழுந்து ஆடுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எங்கள் அணி பேட்டிங்கில் ஒருவரை மட்டுமே சார்ந்து இல்லை. அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை செய்கின்றனர். அதனால் பொல்லார்டு ஃபார்மில் இல்லாதது எங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. எனினும் பொல்லார்டு மீண்டும் ஃபார்முக்கு திரும்பி தெறிக்கவிடுவார். அவர் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் என்று குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் ஆர்சிபி அணியில் ஆடிய குயிண்டன் டி காக்கை அந்த அணி கழட்டிவிட்டது. இதையடுத்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் இதுவரை நன்றாகவே ஆடியுள்ளார் குயிண்டன் டி காக். மேலும் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமான ஆட்டத்தை ஆடிவருகிறார்.
