ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் நடப்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே ஐபிஎல் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன.

புதிய டைட்டில் ஸ்பான்சர், பார்வையாளர்கள் இல்லாத ஸ்டேடியம் என இந்த ஐபிஎல் தொடர் முற்றிலும் புதிதான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ளது. ஐபிஎல்லில் பலமுறை கோப்பையை வென்ற அணிகளும், இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகளும் என அனைத்து அணிகளும் இம்முறை கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளன.

ஐபிஎல்லில் ஆடும் வெளிநாட்டு வீரர்கள், அவரவர் நாடுகளிலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில், 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னர் லசித் மலிங்கா, சொந்த காரணங்களால் இந்த சீசனில் ஆடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மலிங்கா ஆடவில்லையென்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

2009ம் ஆண்டிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் மலிங்கா, இதுவரை ஐபிஎல்லில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். ஸ்லோ யார்க்கர், திடீர் பவுன்ஸர், ஸ்லோ டெலிவரி, வெவ்வேறு லைன் அண்ட் லெந்த்தில் வீசுவது என வெரைட்டியாக வீசவல்ல மலிங்கா, அதனால் டெத் ஓவர்களில் மிகக்குறைந்த ரன்களைக்கூட எதிரணிகளை எடுக்கவிடாமல் தடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல த்ரில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கடந்த சீசனின் ஃபைனலில் கூட, கடைசி ஓவரில் 8 ரன்கள் என்ற மிக எளிதான ரன்னை, அடிக்கவிடாமல், சிஎஸ்கே அணியை சுருட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4வது முறையாக கோப்பையை வென்றுகொடுத்தார். கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இதுமாதிரி ஏராளமான வெற்றிகளை மலிங்கா பெற்று கொடுத்திருக்கிறார். 

இந்நிலையில், சொந்த காரணங்களால் மலிங்கா இந்த சீசனில் ஆடமாட்டார் என்று வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.