ஐபிஎல் 13வது சீசனில் இதுவரை ஆதிக்கம் செலுத்தி, புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி, 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது. பிரித்வி ஷா முதல் ஓவரிலேயே 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் நன்றாக் ஆடிய ரஹானே, 15 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஷிகர் தவான், பவர்ப்ளேயில் மெதுவாக ஆடியதால், ரஹானே அதை ஈடுசெய்ய அடித்து ஆட வேண்டியதாயிருந்தது. இந்த சீசனில் இந்த போட்டியில் தான் முதலில் ஆடினார். அந்தவகையில் கொஞ்ச நேரம் நிதானமாக நின்று ஆடமுடியாமல் அவுட்டானார்.

 அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 33 பந்தில் 42 ரன்கள் அடித்து, பெரிய ஸ்கோரை நோக்கி எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பில் இருந்த முக்கியமான கட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். டெல்லி கேபிடள்ஸின் பவர் ஹிட்டரும் ஃபினிஷருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ் 13 ரன்களில் ரன் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த தவானால், டெத் ஓவரில் பெரிய ஷாட்டுகளை விளாசி பெரியளவில் ஸ்கோர் செய்யமுடியவில்லை. அதனால் டெல்லி அணி 20 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே அடித்தது. தவான் 52 பந்தில் 69 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தாலும், குயிண்டன் டி காக்கும் சூர்யகுமார் யாதவும் இணைந்து அருமையாக ஆடினர். டி காக் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 36 பந்தில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து அரைசதமடித்த சூர்யகுமார் யாதவும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் 15 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். ஆனாலும், டி காக்கும் சூர்யகுமாரும் அதிரடியாக ஆடி மிடில் ஓவரில் வேகமாக ஸ்கோர் செய்ததால், இலக்கு எளிதாக இருந்தது. அதனால் அவசரப்படாமல் மிக நிதானமாக ஆடி பொல்லார்டும் க்ருணல் பாண்டியாவும் இணைந்து அணியை வெற்றி பெற செய்தனர்.

இதையடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடள்ஸை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.