ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால், கேப்டன்சி செய்யும் பொல்லார்டு, டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், பியூஷ் சாவ்லா ஆகிய மூவரும் நீக்கப்பட்டு, இம்ரான் தாஹிர், ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர். 

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டுப்ளெசியும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட், ரன்னே விட்டுக்கொடுக்காமல் ருதுராஜ் கெய்க்வாட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் ராயுடு(2) மற்றும் ஜெகதீசன்(0) விக்கெட்டை பும்ரா வீழ்த்த, அதற்கடுத்த ஓவரை வீசிய போல்ட், டுப்ளெசியை(1) வீழ்த்தினார். 3 ஓவரில் வெறும் 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே அணி.

அதன்பின்னர் தோனியும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்ததால் அவர்கள் அணியை கரை சேர்த்துவிடுவார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக ஜடேஜா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜடேஜாவை போல்ட் வீழ்த்த, தோனியை 16 ரன்களுக்கு ராகுல் சாஹர் வீழ்த்த, சிஎஸ்கே அணி 6.4 ஓவரில் 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது சிஎஸ்கே.

அதன்பின்னர் தீபக் சாஹர் ரன்னே அடிக்காமலும், ஷர்துல் தாகூர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற முனைப்பில் தனி ஒருவனாக போராடினார் சாம் கரன். 8 விக்கெட்டுகள் விழுந்த பின்னர், 9வது விக்கெட்டுக்கு சாம் கரனுடன் ஜோடி சேர்ந்த இம்ரான் தாஹிர், விக்கெட்டை இழந்துவிடாமல் சாம் கரனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

பொறுப்புடனும் அதேவேளையில் மிகச்சிறப்பாகவும் ஆடிய சாம் கரன், ட்ரெண்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி அரைசதம் அடித்தார். 47 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்த சாம் கரன், இன்னிங்ஸின் கடைசி பந்தில் போல்ட் வீசிய யார்க்கரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 

சாம் கரனின் போராட்டத்தால் 20 ஓவரில் 114 ரன்கள் அடித்த சிஎஸ்கே அணி, 115 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது. அந்த எளிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய டி காக் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தனர்.

ஹேசில்வுட், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் இருவரும் சேர்ந்து அடித்து துவம்சம் செய்தனர். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் திணறியது சிஎஸ்கே அணி. டி காக் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து 12வது ஓவரிலேயே 115 ரன்கள் என்ற இலக்கை எட்டி மும்பை இந்தியன்ஸூக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று கொடுத்தனர்.

இஷான் கிஷன் 37 பந்தில் 68 ரன்களும் டி காக் 37 பந்தில் 46 ரன்களும் குவித்தனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.