ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும் ராகுல் திரிபாதியும் களத்திற்கு வந்தனர்.  2வது ஓவரை வீசிய முகமது சிராஜ், அந்த ஓவரின் 3வது பந்தில் திரிபாதியை ஒரு ரன்னிலும், அதற்கடுத்த பந்திலேயே நிதிஷ் ராணாவையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். அந்த ஓவரில் ரன்னே வழங்காமல் மெய்டன் ஓவராகவும் வீசினார். 

நவ்தீப் சைனி வீசிய அதற்கடுத்த ஓவரில் ஷுப்மன் கில்லை சைனி ஒரு ரன்னில் வீழ்த்தினார். ஆனால் அந்த ஓவரில் 10 ரன்கள் கொடுத்தார். இதையடுத்து 4வது ஓவரை வீசிய முகமது சிராஜ், அந்த ஓவரையும் மெய்டனாக வீசியதுடன், டாம் பாண்ட்டனை 10 ரன்களுக்கு அவுட்டாக்கினார். 2 மற்றும் 4 ஆகிய 2 ஓவர்களையும் அடுத்தடுத்து மெய்டனாக வீசினார் முகமது சிராஜ்.

இதன்மூலம் ஐபிஎல்லில் அடுத்தடுத்த 2 ஓவர்களை மெய்டன் ஓவராக வீசிய முதல் பவுலர் என்ற சாதனையை சிராஜ் படைத்துள்ளார். இதற்கு முன் ஐபிஎல்லில் எந்த பவுலருமே தொடர்ச்சியாக 2 மெய்டன் ஓவர்களை வீசியதில்லை. எனவே தொடர்ச்சியாக 2 மெய்டன் ஓவர்களை வீசி ஐபிஎல்லில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் சிராஜ். கீழ்க்காணும் வீடியோ தான் முதல் மெய்டன் ஓவர்.

பவர்ப்ளேயில் 4 விக்கெட் இழப்பிற்கு வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்த கேகேஆர் அணி, தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டையும் 4 ரன்களுக்கு இழந்தது. 9 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு வெறும் 33 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது கேகேஆர் அணி.