ரோஹித் சர்மா தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார். 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி திறன், ஐபிஎல்லின் மூலமாகத்தான் வெளிவந்தது. 2013, 2015, 2017 என மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை பயன்படுத்தும் விதம், வீரர்களை கையாளும் விதம், பொறுமை, நிதானம் என கேப்டன்சியில் கலக்குறார் ரோஹித் சர்மா.

கோலி ஆடாத போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, அதிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். ஆசிய கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பொறுப்பேற்றுக்கொள்ள பணித்தால், அதை ஏற்று கேப்டனாக செயல்பட தயாராக இருப்பதாக வெளிப்படையாகவே அதிரடியாக தெரிவித்தார். 


 
ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட முழு தகுதியுடையவர் தான். கோலியை விட கேப்டன்சி திறன் ரோஹித்துக்கு அதிகம்தான். அதை பல தருணங்களில் களத்தில் அவரது செயல்பாடுகளின் மூலம் அறிய முடியும். 

இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, அதற்கு பின்னர் ஆடிய இரண்டு போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. அதுவும் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்திவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது. 

அதிலும் வார்னர், பேர்ஸ்டோ, விஜய் சங்கர், யூசுப் பதான், மனீஷ் பாண்டே என நல்ல பேட்டிங் ஆர்டரை கொண்ட சன்ரைசர்ஸ் அணியை 137 ரன்களை எடுக்கவிடாமல் 96 ரன்களிலேயே சுருட்டி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த வெற்றியை அடுத்து, ரோஹித் சர்மா ஒரு மிக மிக சிறந்த கேப்டன் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் டுவிட்டரில் மனதார பாராட்டியுள்ளார்.