ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனிலாவது முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்புடன் இறங்கிய ஆர்சிபி அணி, பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது.

ஆர்சிபி அணி பிளே ஆஃபிற்கு மிக வசதியாக முன்னேறவில்லை. டெல்லி கேபிடள்ஸ் அணி, ஆர்சிபி அணியை 18வது ஓவரின் 3வது பந்தில் வீழ்த்தியிருந்தால், இன்று நடக்கும் சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இடையேயான கடைசி போட்டியின் முடிவிற்காக ஆர்சிபி அணி காத்திருந்திருக்க வேண்டும். ஆனால் டெல்லி கேபிடள்ஸ் 19வது ஓவரில் வென்றதால், ஆர்சிபியை போலவே 14 புள்ளிகளை பெற்றுள்ள கேகேஆர் அணியின் நெட் ரன்ரேட்டைவிட ஆர்சிபி அதிகமாக பெற்றுள்ளது. எனவே சன்ரைசர்ஸ் போட்டி முடிவு தெரிவதற்குள்ளாகவே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டது.

ஆனாலும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி கோப்பையை வெல்லுமளவிற்கு தகுதி வாய்ந்த அணி கிடையாது என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் வான், ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்லுமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியாது என்றே நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறேன். ஆனால் 2020ல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உலகமே எதிர்பாராததை எதிர்நோக்கியிருக்கிறது. எனவே என்ன நடக்குமென்று யாருக்கு தெரியும். கோலி இடது கை பேட்டிங் ஆடி கூட, ஆர்சிபிக்கு போட்டியை ஜெயித்து கொடுக்கலாம் என்று நக்கலாக தெரிவித்துள்ளார்.

மேலும் விராட் கோலி இந்த சீசனில் ஓரளவிற்கு நன்றாகவே ஆடியிருந்தாலும், அவரது திறமைக்கும் தகுதிக்கும் இது குறைவே. கோலியும் மனிதர் தான். எனவே அவரும் சில நேரங்களில் ஃபார்மை இழப்பது இயல்புதான் என்றும் வான் தெரிவித்துள்ளார்.