ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3 முறை சாம்பியன்களான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. 

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் நல்ல நிலையில் உள்ளன. இந்த மூன்று அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.

இந்த சீசனை மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய அணி கேகேஆர் தான். அதற்கு காரணம், அந்த அணியின் மிரட்டல் ஃபினிஷர், அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் தான். டெத் ஓவர்களில் எதிரணிகளின் பந்துவீச்சை தெறிக்கவிட்டு, சாத்தியமில்லாத விஷயங்களை கூட சாத்தியப்படுத்திவிடுகிறார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் எதிரணி பவுலர்கள் திணறிவருகிறார்கள். கேகேஆர் அணியில் இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரராக ரசல்தான் உள்ளார். ரசல் ஒருவர் தான் கேகேஆர் அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தார். 

கேகேஆர் அணி ரசலையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அவரும் அந்த அணியின் நம்பிக்கையை வீணடிக்காமல் தொடர்ந்து நன்றாக ஆடிவருகிறார். இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கேகேஆர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் வார்னரும் பேர்ஸ்டோவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கே 131 ரன்களை குவித்துவிட்டனர். வார்னர்  67 ரன்களில் அவுட்டாக, பேர்ஸ்டோவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ, 15வது ஓவரிலேயே போட்டியை முடித்துவிட்டார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் கேகேஆர் அணியின் ஸ்கோர் மிகமிகக்குறைவு. அதிரடியாக ஆடக்கூடிய ஆண்ட்ரே ரசலை 7ம் வரிசையில் இறக்கிவிட்டனர். அவர் வெறும் 9 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டார். மிடில் ஓவர்களில் கேகேஆர் வீரர்கள் மந்தமாக ஆடியதால் இறுதியில் ஸ்கோரை உயர்த்த வேண்டிய அழுத்தம் ரசலுக்கு அதிகமானது. இதே அவரை 5ம் வரிசையில் இறக்கிவிட்டிருந்தால் கேகேஆர் அணிக்கு அழுத்தம் அதிகரிக்காமல் சீரான வேகத்தில் ஸ்கோர் உயர்ந்திருக்கும். 

ஆண்ட்ரே ரசலை 7ம் வரிசையில் இறக்கியதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாக் கடுமையாக சாடியுள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் ஆண்ட்ரே ரசலை கேகேஆர் அணி ஏன் 7ம் வரிசையில் இறக்கியது என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ரசலை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் வேஸ்ட் ஆக்கிவிட்டனர் என்று டுவிட்டரில் சாடியுள்ளார்.