ஐபிஎல் 13வது சீசனில், தலா 8 புள்ளிகளை பெற்ற பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க, கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று ஆடுகின்றன. துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயன்க் அகர்வாலுக்கு பதிலாக மந்தீப் சிங்கும், ஜிம்மி நீஷமுக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டானும் சேர்க்கப்பட்டிருந்தனர். ராகுலும் மந்தீப் சிங்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 17 ரன்களில் மந்தீப் சிங் ஐந்தாவது ஓவரில் சந்தீப் ஷர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், 20 ரன்களில் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

கெய்லை விட்டு விலக்கி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் ஹோல்டர். எப்போது கால்களை நகர்த்தி ஆடமாட்டார் கெய்ல். எனவே அந்தவகையில், அவரை விட்டு விலக்கி வீசப்பட்ட பந்தை, நின்ற இடத்திலிருந்தே விரட்டி அடிக்க, அது நேராக வார்னரின் கைக்கு சென்றது. இதையடுத்து கேஎல் ராகுலும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வழக்கம்போலவே இந்த போட்டியிலும், நன்றாக ஆடி அணியை கரைசேர்க்க கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிட்ட பத்தே முக்கால் கோடி மேக்ஸ்வெல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா(0), ஜோர்டான்(7), முருகன் அஷ்வின்(4) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறியதால் மறுமுனையில் நின்ற நிகோலஸ் பூரானுக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

ஒருமுனையில் பூரான் நிலைத்து நின்றாலும், அவரால் அடித்து ஆடமுடியவில்லை. 28 பந்தில் 32 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகவில்லை பூரான். அவர் எதிர்கொண்ட 28 பந்தில் வெறும் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடக்கூடிய பூரான், அவரது இயல்பான இன்னிங்ஸை ஆடவில்லை. இதையடுத்து 20 ஓவரில் வெறும் 126 ரன்கள் மட்டுமே அடித்த பஞ்சாப் அணி, 127 ரன்கள் என்ற எளிய இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.