ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கேவை எதிர்கொண்டது பஞ்சாப் அணி. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் மயன்க் அகர்வாலும் இணைந்து பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவரில் 48 ரன்களை சேர்த்தனர். மயன்க் அகர்வால் 26 ரன்களுக்கு இங்கிடியின் பந்தில் ஆட்டமிழக்க, ராகுலையும் 29 ரன்களுக்கு கிளீன் போல்டாக்கி அனுப்பினார் இங்கிடி. 

மிடில் ஓவர்களில் கெய்ல், பூரான் ஆகியோர் சொதப்பினர். கெய்ல் 19 பந்தில் 12 ரன்களுக்கும் பூரான் 6 பந்தில் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணியின் பவர் ஹிட்டர்களான கெய்ல் மற்றும் பூரான் ஆகிய இருவரும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அதனால் மிடில் ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. பவர்ப்ளேயில் 53 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் அணி, 7 முதல் 15வது ஓவர் வரை வெறும் 42 ரன்கள் மட்டுமே அடித்தது. 

ஆனால் டெத் ஓவர்களில் தீபக் ஹூடா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து தனி ஒருவனாக பஞ்சாப் அணியை கரைசேர்த்தார். லுங்கி இங்கிடி, ஷர்துல் தாகூர் ஆகியோரின் பவுலிங்கில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய தீபக் ஹூடா, அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று பஞ்சாப் அணி நல்ல ஸ்கோரை அடிக்க உதவினார்.  30 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடித்தார். 

தீபக் ஹூடாவின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 153 ரன்கள் அடித்தது பஞ்சாப் அணி. 154 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் டுப்ளெசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்ததுடன், ரன்ரேட்டை 9க்கு குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

டுப்ளெசிஸும் கெய்க்வாட்டும் இணைந்து 10 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 82 ரன்களை சேர்த்தனர். டுப்ளெசிஸ் 48 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்த ராயுடுவும் சிறப்பாக ஆடினார். அபாரமாக ஆடிய கெய்க்வாட், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்து, தொடர்ச்சியாக தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார்.

அபாரமாக ஆடிய கெய்க்வாட் கடைசிவரை களத்தில் நின்று சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை சிதைத்து, தங்களுடன் பஞ்சாப்பையும் அழைத்துச்சென்றது. இந்த தோல்வியின் மூலம், இந்த சீசன் முழுவதும் சிறப்பாக ஆடியும், சிறிய சிறிய தவறுகள் செய்ததன் விளைவாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது பஞ்சாப் அணி.