ஐபிஎல் 13வது சீசனில், பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர், பவுலிங்கை தேர்வு செய்தார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயன்க் அகர்வாலுக்கு பதிலாக மந்தீப் சிங்கும், ஜிம்மி நீஷமுக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டானும் சேர்க்கப்பட்டிருந்தனர். ராகுலும் மந்தீப் சிங்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 17 ரன்களில் மந்தீப் சிங் ஐந்தாவது ஓவரில் சந்தீப் ஷர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல், 20 ரன்களில் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

கெய்லை விட்டு விலக்கி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் ஹோல்டர். எப்போது கால்களை நகர்த்தி ஆடமாட்டார் கெய்ல். எனவே அந்தவகையில், அவரை விட்டு விலக்கி வீசப்பட்ட பந்தை, நின்ற இடத்திலிருந்தே விரட்டி அடிக்க, அது நேராக வார்னரின் கைக்கு சென்றது. இதையடுத்து கேஎல் ராகுலும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

வழக்கம்போலவே இந்த போட்டியிலும், நன்றாக ஆடி அணியை கரைசேர்க்க கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிட்ட பத்தே முக்கால் கோடி மேக்ஸ்வெல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா(0), ஜோர்டான்(7), முருகன் அஷ்வின்(4) என அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறியதால் மறுமுனையில் நின்ற நிகோலஸ் பூரானுக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

ஒருமுனையில் பூரான் நிலைத்து நின்றாலும், அவரால் அடித்து ஆடமுடியவில்லை. 28 பந்தில் 32 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகவில்லை பூரான். அவர் எதிர்கொண்ட 28 பந்தில் வெறும் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். பெரிய ஷாட்டுகளை அடித்து ஆடக்கூடிய பூரான், அவரது இயல்பான இன்னிங்ஸை ஆடவில்லை. இதையடுத்து 20 ஓவரில் வெறும் 126 ரன்கள் மட்டுமே அடித்த பஞ்சாப் அணி, 127 ரன்கள் என்ற எளிய இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது.

127 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர், அதிரடியாக ஆடிய 20 பந்தில் 35 ரன்கள் ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். வார்னரின் அதிரடியால் முதல் விக்கெட்டுக்கு சன்ரைசர்ஸ் அணி 6.2 ஓவரில் 56 ரன்களை குவித்தனர். பேர்ஸ்டோவும் 15 ரன்களில் முருகன் அஷ்வினின் சுழலில் விழ, அப்துல் சமாத் 7 ரன்களில் அவுட்டானார்.

அதன்பின்னர், கடந்த போட்டியில் சன்ரைசர்ஸுக்கு வெற்றியை தேடிக்கொடுத்த மனீஷ் பாண்டேவும் விஜய் சங்கரும் ஜோடி சேர்ந்ததாலும், இலக்கு எளிதானது என்பதாலும் அவர்கள் இருவரும் இணைந்து போட்டியை முடித்துவிடுவார்கள் என சன்ரைசர்ஸ் அணி எதிர்பார்த்திருக்கும். 

ஆனால் இலக்கு எளிதானது என்பதால், விக்கெட்டை இழந்துவிடாமல் கடைசிவரை போட்டியை எடுத்துச்சென்றாலே இலக்கை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் நிதானமாக ஆடுவதாக நினைத்து மிகவும் மந்தமாக ஆடி 29 பந்தில் பதினைந்து ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டும் ஆனார். 17வது ஓவரின் முதல் பந்தில் மனீஷ் பாண்டே அவுட்டாக, அதற்கடுத்த ஓவரில் விஜய் சங்கரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஹோல்டர், ரஷீத் கான், ப்ரியம் கர்க் என அனைவரையுமே அவுட்டாக்கி, 19.5 ஓவரில் 114 ரன்களுக்கே சன்ரைசர்ஸை சுருட்டி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

எளிதாக ஜெயிக்க வேண்டிய போட்டியை, எளிய இலக்கு என்பதாலேயே அசால்ட்டாக ஆடி வெற்றியை பஞ்சாப்புக்கு தாரைவார்த்தது சன்ரைசர்ஸ் அணி.