மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். 3வது ஓவரிலேயே ரோஹித்தை 9 ரன்களுக்கு வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் ஷமி. இஷான் கிஷனும் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது மும்பை இந்தியன்ஸ் அணி.

அதன்பின்னர் டி காக்குடன் ஜோடி சேர்ந்த க்ருணல் பாண்டியா, பொறுப்புடனும் அதேநேரத்தில் பெரிய ஷாட்டுகளும் ஆடி டி காக்குடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடி 30 பந்தில் 34 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பெரியளவிலான இன்னிங்ஸ் இல்லையென்றாலும், அந்த பார்ட்னர்ஷிப், மும்பை இந்தியன்ஸ் இருந்த நிலைக்கு மிக முக்கியமானது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதமடித்த டி காக், 43 பந்தில் 53 ரன்களுக்கு 17வது ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழந்தார்.

டெத் ஓவர்களில் பொல்லார்டும் குல்ட்டர்நைலும் இணைந்து, மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்த்த ஸ்கோரை விட அதிக ரன்களை அடிக்க உதவினர். டெத் ஓவர்களில் வழக்கம்போலவே சிக்ஸர்களை விளாசி மிரட்டினார் பொல்லார்டு. அவரை தனியாக விடாமல், குல்ட்டர்நைலும் 4 பவுண்டரிகளுடன் 12 பந்தில் 24 ரன்கள் அடித்தார். அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசிய பொல்லார்டு, கிறிஸ் ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். 12 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 176 ரன்கள் அடித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு நிர்ணயித்தது. பொல்லார்டு மற்றும் குல்ட்டர்நைலின் அதிரடியான பேட்டிங்கால், கடைசி 3 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்களை குவித்தது.

177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வாலை 11 ரன்களில் கிளீன் போல்டாக்கி அனுப்பினார் பும்ரா. அதன்பின்னர் கெய்ல் மற்றும் பூரான் ஆகிய இருவரும் தலா 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வழக்கம்போலவே மேக்ஸ்வெல் ரன்னே அடிக்காமல் வந்ததும் சென்றார். அதன்பின்னர் முழு பொறுப்பும் ராகுல் மீது இறங்கியது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த ராகுல், கடைசிவரை போட்டியை எடுத்துச்சென்று வெற்றியை பெற்றுக்கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் மிகச்சரியான சிந்தனையில் கடைசி வரை போட்டியை எடுத்துச்சென்றார். ஆனால் 18வது ஓவரில் மிகத்துல்லியமான யார்க்கரில் 77 ரன்களுக்கு ராகுலை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா.

கடைசி 2 ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. குல்ட்டர்நைல் வீசிய 19வது ஓவரில் ஹூடாவும் கிறிஸ் ஜோர்டானும் இணைந்து 12 ரன்கள் அடித்தனர். கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், முதல் ஐந்து பந்தில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்தையும் அருமையாக வீசிய டிரெண்ட் போல்ட், கடைசி பந்தையும் சிறப்பாக வீச, அந்த பந்தை அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயன்றனர். ஆனால் 2வது ரன் ஓடும்போது பொல்லார்டின் அருமையான ஃபீல்டிங் மற்றும் டி காக்கின் சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் ஜோர்டான் ரன் அவுட்டாக, போட்டி டை ஆனது.

இதையடுத்து சூப்பர் ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா வீசினார். பஞ்சாப் அணி சார்பில் ராகுலும் பூரானும் இறங்கினர். பூரானை அவுட்டாக்கிய பும்ரா, சூப்பர் ஓவரில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். வெறும் ஆறு ரன்கள் என்ற இலக்கை சூப்பர் ஓவரில் விரட்ட ரோஹித்தும் டி காக்கும் களத்திற்கு வந்தனர். பஞ்சாப் அணி சார்பில் நெருக்கடியான அந்த ஓவரை ஷமி வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன்கள் அடித்த நிலையில், 4வது பந்தில் ரன் அடிக்காத ரோஹித், அடுத்த பந்தில் சிங்கிள் அடிக்க, கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2வது ரன் ஓடும்போது டி காக் ரன் அவுட்டாக, சூப்பர் ஓவரும் டை ஆனது.

சூப்பர் ஓவரும் டை ஆனதால், 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதல் சூப்பர் ஓவரை வீசிய பவுலர் மீண்டும் வீசக்கூடாது என்பதால், பஞ்சாப் அணியில் கிறிஸ் ஜோர்டான் பந்துவீசினார். பொல்லார்டும் ஹர்திக் பாண்டியாவும் களமிறங்கினர். முதல் பந்தில் பொல்லார்டும் இரண்டாவது பந்தில் பாண்டியாவும் சிங்கிள் அடிக்க, 3வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பொல்லார்டு, அடுத்த பந்தை அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயன்ற போது, பாண்டியா ரன் அவுட்டாக, ஐந்தாவது பந்தில் பொல்லார்டுக்கு விக்கெட் கீப்பிங் கேட்ச் என்று அம்பயர் அவுட் கொடுக்க, அதற்கு ரிவியூ எடுத்து தப்பினார் பொல்லார்டு. ஆனால் அந்த பந்தில் ரன் இல்லை. கடைசி பந்தை பொல்லார்டு தூக்கியடிக்க, மிட் விக்கெட் திசையில், அதை கேட்ச் பிடித்த மயன்க் அகர்வால் பவுண்டரி லைனுக்குள் விழப்போவதற்கு முன் வெளியே தூக்கி வீசியதால், அதற்கு 2 ரன் ஓடினர். தனது அணிக்காக 4 ரன்களை காப்பாற்றி கொடுத்தார் மயன்க்.

இதையடுத்து 2வது ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 11 ரன்கள் அடிக்க, 12 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி சார்பில் கெய்லும் மயன்க் அகர்வாலும் களத்திற்கு வந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், மெயின் மேட்ச்சில் கடைசி ஓவரை அருமையாக வீசி சூப்பர் ஓவருக்கு வழிவகுத்த போல்ட் வீசினார். ஆனால் இம்முறை போல்ட்டின் பருப்பு வேகவில்லை. ஏனெனில் களத்தில் இருந்தது யுனிவர்ஸ் பாஸ்.

போல்ட் வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிய கெய்ல், 2வது பந்தில் சிங்கிள் அடிக்க, அடுத்த பந்தை பவுண்டரி அடித்த மயன்க், அதற்கடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை தேடிக்கொடுத்தார். இதையடுத்து 2வது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி ஆறு புள்ளிகளை பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே 2 சூப்பர் ஓவர் வீசப்பட்ட முதல் போட்டி இதுதான். இரு அணிகளுமே கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் கடுமையாக போராடின.