ஐபிஎல் 13வது சீசனில் பிளே ஆஃபிற்கு மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் கிட்டத்தட்ட முன்னேறிவிட்ட நிலையில், 4ம் இடத்திற்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் கேகேஆர் மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதின.

12 புள்ளிகல்ளுடன் 4ம் இடத்தில் இருந்த  கேகேஆரும் 10 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் இருந்த பஞ்சாப்பும் நீயா நானா என்ற  போட்டியில் இன்று மோதின. ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியில் ஷுப்மன் கில் மற்றும் கேப்டன் இயன் மோர்கனை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மேக்ஸ்வெல் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே நிதிஷ் ராணா ஆட்டமிழக்க, ஷமி வீசிய 2வது ஓவரில் திரிபாதி(7) மற்றும் தினேஷ் கார்த்திக்(0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தனர். 10 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது கேகேஆர்.

அதன்பின்னர் கில்லும் மோர்கனும் ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியின் பவுலிங்கை அடித்து ஆடி, 8 ஓவரில் 81 ரன்களை குவித்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த மோர்கன் 25 பந்தில் 40 ரன்கள் அடித்து 10வது ஓவரில் ஆட்டமிழக்க, மறுபடியும் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது. சுனில் நரைன்(6), நாகர்கோட்டி(6), கம்மின்ஸ்(1) ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த கில்லும் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி சில ஓவர்களில் ஃபெர்குசன் 13 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 24 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது கேகேஆர் அணி.

150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் மந்தீப் சிங்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களை சேர்த்தனர். ராகுல் 28 ரன்களுக்கு வருண் சக்கரவர்த்தியின் பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கெய்ல் அதிரடியாக ஆடி மளமளவென ஸ்கோரை உயர்த்தினார்.

மந்தீப் சிங் நிதானமாக ஆட, கெய்ல் களத்திற்கு வந்தது முதலே சிக்ஸர்களை விளாச தொடங்கினார். இருவரும் இணைந்து அருமையாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து கிட்டத்தட்ட போட்டியை முடித்துவைக்க போன நிலையில், வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், கெய்ல் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 29 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களுக்கு கெய்ல் ஆட்டமிழக்க, தொடக்க வீரர் மந்தீப் சிங்(66) கடைசி வரை களத்தில் நின்று,  போட்டியை முடித்துவைக்க வேண்டிய தனது பணியை செவ்வனே செய்தார். எனவே 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, கேகேஆரை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது.