ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றில் இன்னும் இரண்டே போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், இதுவரை பிளே ஆஃபிற்கு ஒரேயொரு அணி(மும்பை) மட்டுமே முன்னேறியுள்ளது. இன்னும் 3 இடங்களுக்கான வாய்ப்புகள் ஓபனாகவே உள்ளது. அந்தளவிற்கு இந்த சீசன் சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது.

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று கேகேஆரும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, மோர்கனின் அதிரடியான பேட்டிங்கால்(35 பந்தில் 68 ரன்கள்), 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது.

192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 131 ரன்களுக்கு சுருட்டி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கேகேஆர் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து நேரடியாக 4ம் இடத்திற்கு(14 புள்ளிகள்) முன்னேறி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்த போட்டியில் பாட் கம்மின்ஸ் அருமையாக வீசி ஸ்டோக்ஸ், உத்தப்பா, ஸ்மித், ரியான் பராக் ஆகிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். செம ஃபார்மில் மும்பை அணிக்கு எதிராக சதமும், பஞ்சாப்புக்கு எதிராக அதிரடி அரைசதமும் அடித்து ராஜஸ்தான் அணியின் வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்த மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸை, இந்த போட்டியில் சோபிக்கவிடாமல் வீழ்த்தினார் கம்மின்ஸ். 

ஸ்டோக்ஸை 18 ரன்களுக்கு கம்மின்ஸ் வீழ்த்தினார். ஸ்டோக்ஸ் நின்று ஆடியிருந்தால், போட்டி தலைகீழாக மாறியிருக்கும். ஆனால் அதற்கு கம்மின்ஸ் அனுமதிக்கவில்லை. ஸ்டோக்ஸின் விக்கெட் கம்மின்ஸுக்கு மட்டும் சொந்தமல்ல. கம்மின்ஸை விட அந்த விக்கெட்டுக்கு மிக முக்கிய காரணம் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான். 

கம்மின்ஸ் வீசிய பந்து, ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை விட்டு நன்கு விலகிச்சென்றது. அசாத்தியமாக டைவ் அடித்து காற்றில் பறந்தபடியே அந்த கேட்ச்சை ஒற்றை கையில் பிடித்தார் தினேஷ் கார்த்திக். அதுவும், பந்து கையில் சிக்கவில்லை. க்ளௌவில் தான் சிக்கியது. காற்றில் டைவ் அடித்து விழுந்தபோதும், சரியாக கையில் சிக்காமல் க்ளௌவில் சிக்கிய பந்தை விட்டுவிடாமல் அருமையாக பேலன்ஸ் செய்து பிடித்தார் தினேஷ் கார்த்திக். அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த கேட்ச்சை கண்டு வியந்த வர்ணனையாளரும் ஆல்டைம் சிறந்த கீப்பர்களில் ஒருவருமான சங்கக்கரா, பென் ஸ்டோக்ஸால் இதை நம்பமுடியவில்லை. ஸ்டோக்ஸால் மட்டுமல்ல; கமெண்ட்ரி பாக்ஸில் இருக்கும் நம்மால் கூடத்தான் என்றார்.

தினேஷ் கார்த்திக் பறவை போல பறந்து அந்த கேட்ச்சை பிடித்ததாக இர்ஃபான் பதான் டுவிட்டரில் பாராட்டியிருந்தார்.