ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை தாண்டிவிட்டது. கேகேஆர் அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது.
 
இந்த சீசனில் கேகேஆர் அணியில் ஸ்பின்னராக குல்தீப் யாதவைவிட, வருண் சக்கரவர்த்திக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குல்தீப் யாதவ் இந்த சீசனில் 3 போட்டிகளில் மட்டுமே ஆடி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். 3 போட்டிகளுக்கு பிறகு வருண் சக்கரவர்த்தியை முதன்மை ஸ்பின்னராக எடுத்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக்

இந்நிலையில், கவுதம் கம்பீருக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், தனக்கு அணியில் வாய்ப்பளிக்காத தினேஷ் கார்த்திக்கை சாடியுள்ளார் குல்தீப் யாதவ். கேகேஆர் அணிக்கு 2 முறை கோப்பையை வென்று கொடுத்த கம்பீருக்கு இன்று 39வது பிறந்தநாள். 

கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் தான் 2016ல் குல்தீப் யாதவ் ஐபிஎல்லில் அறிமுகமானார். அந்த சீசனில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடிய குல்தீப், அடுத்த சீசனில் அணியின் முக்கிய அங்கமாகி 12 போட்டிகளில் ஆடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணியின் கேப்டனான பின்னர் குல்தீப் யாதவ் முதன்மை ஸ்பின்னராக பாவிக்கப்படவில்லை. அதற்கு அவர் சரியாக பந்துவீசாததும் காரணம்.

இந்நிலையில், கம்பீருக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்து டுவீட்டில், என் மீது எப்போதுமே அபார நம்பிக்கை வைத்திருந்த, நான் கிரிக்கெட்டை அதிகமாக கற்றுக்கொண்ட மனிதர் கம்பீர். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று, தன் மீது தினேஷ் கார்த்திக் நம்பிக்கை வைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பதிவிட்டுள்ளார் குல்தீப் யாதவ். ரசிகர்களும், குல்தீப் யாதவின் டுவீட்டை தினேஷ் கார்த்திக்கை மறைமுகமாக சாடும் வகையிலேயே பார்க்கின்றனர்.