பெங்களூரு அணியில் தான் சிறப்பாக ஆடாததற்கான காரணத்தை முன்னாள் பெங்களூரு அணியின் வீரரும் தற்போதைய பஞ்சாப் அணியின் தொடக்க வீரருமான கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். 

கேஎல் ராகுல் 2013ம் ஆண்டிலிருந்து ஐபிஎல்லில் ஆடிவருகிறார். 2013ம் ஆண்டு ஆர்சிபி அணியில் ஆடிய ராகுல், அதன்பிறகு 2014 மற்றும் 2015 ஆகிய சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். பின்னர் 2016ம் ஆண்டில் மீண்டும் ஆர்சிபி அணியில் இணைந்த ராகுல், 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் ஆர்சிபி அணியில் ஆடினார். ஆனால் இந்த இரண்டு சீசன்களிலுமே அவர் சரியாக ஆடவில்லை. 

அதனால் ஆர்சிபி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ராகுலை 2018ம் ஆண்டில் பஞ்சாப் அணி எடுத்தது. பஞ்சாப் அணி ராகுலின் மீது நம்பிக்கை வைத்து அதிகமான தொகை கொடுத்து எடுத்தது. அந்த அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை வீணடிக்காத ராகுல், கடந்த சீசனில் அபாரமாக ஆடினார். 

அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லுடன் தொடக்க வீரராக களமிறங்கி, கடந்த சீசனில் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரராக சீசனை வெற்றிகரமாக முடித்தார். பெங்களூரு அணியில் இருக்கும்போது சரியாக ஆடாத ராகுல், பஞ்சாப் அணியில் அபாரமாக ஆடினார். 

பெங்களூரு அணியில் சரியாக ஆடமுடியாததற்கான காரணத்தையும் பஞ்சாப் அணியில் சிறப்பாக ஆடியதற்கான காரணத்தையும் ராகுல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கேஎல் ராகுல், ஆர்சிபி அணியில் இருக்கும்போது விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் என்ற இரு ஜாம்பவான்களின் நிழலிலேயே இருந்தேன். ஆனால் பஞ்சாப் அணியில் நான் தான் நம்பர் 1. அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததோடு, எனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர உதவியது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.