கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில்லும், ராகுல் திரிபாதியும் களத்திற்கு வரவே, பவர்ப்ளேயில் ஷமியும் அர்ஷீப்பும் சிங்கும் இணைந்து அருமையாக பந்துவீசினர். ராகுல் திரிபாதியை பேட்டிங் முனையில் நிறுத்தி, 2வது ஓவரில் ஒரு ரன்னை கூட கொடுக்காமல் மெய்டன் ஓவராக வீசினார் அர்ஷ்தீப். பவர்பிளேயில் கேகேஆர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 25 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 4ம் வரிசையில் இறங்கிய மோர்கன், 23 பந்தில் 24 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, ஒருமுனையில் கில் மட்டும் நிலைத்து நின்றார்.

மோர்கன் ஆட்டமிழந்த பிறகு கில்லுடன் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். கில் நிதானமாக நின்று அரைசதம் அடித்தார். 15வது ஓவரில்தான் கேகேஆர் அணி 100 ரன்களையே எட்டியது. 15 ஓவர் முடிவில் 101 ரன்கள் அடித்திருந்தது கேகேஆர் அணி.

ஃபார்மை தேடிக்கொண்டிருந்த கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக், இந்த இன்னிங்ஸை அதற்கு பயன்படுத்தி கொண்டார். 16வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய தினேஷ் கார்த்திக், ஜோர்டான் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார். ஷமி வீசிய 18வது ஓவரில் முதல் 3 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களை சேர்த்ததுடன் 22 பந்தில் அரைசதம் அடித்தார் தினேஷ் கார்த்திக். ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக்கின் அதிவேக அரைசதம் இதுதான். 

அந்த ஓவரில் கில் 57 ரன்களில் அவுட்டாக, அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் ஒரேயொரு பவுண்டரி மட்டும் அடித்த ஆண்ட்ரே ரசல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக்   ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த கேகேஆர், 165 ரன்களை பஞ்சாப்புக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 15 ஓவரில் 101 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த பஞ்சாப், கடைசி ஐந்து ஓவர்களில் 63 ரன்களை வாரி வழங்கினர். அதனால் தான் இந்த ஸ்கோர் கிடைத்தது.

இதையடுத்து 165  ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் வழக்கம்போலவே சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவருமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் திணறியது கேகேஆர் அணி.

முதல் விக்கெட்டுக்கு கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இணைந்து 14.2 ஓவரில் 115 ரன்களை குவித்தனர். 39 பந்தில் 56 ரன்கள் அடித்து மயன்க் அகர்வால் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆட்டம் தலைகீழாக திரும்பியது. பூரான் 16 ரன்களிலும் பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, களத்தில் ஒருமுனையில் நிலைத்து ஆடி கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க நினைத்த ராகுல் 74 ரன்களில் 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

கிட்டத்தட்ட பந்துக்கு நிகரான ரன்னே பஞ்சாப்பின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் கடைசி சில ஓவர்களில் சரியாக ஆடாததால் நெருக்கடி அதிகரித்தது. 19 ஓவரில் 151 ரன்கள் அடித்த நிலையில், கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 

கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன் அடித்த மேக்ஸ்வெல், 2வது பந்தில் ரன் அடிக்காமல் 3வது பந்தில் பவுண்டரி அடித்துவிட்டு, நான்காவது பந்தில் சிங்கிள் ஓடினார். ஐந்தாவது பந்தில் மந்தீப் சிங் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் பஞ்சாப்பின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட, கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டி டை ஆக்க நினைத்த மேக்ஸ்வெல், சுனில் நரைன் வீசிய பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் தூக்கியடித்தார். பந்து பவுண்டரி லைனுக்கு சற்று முன் பிட்ச் ஆனதால் பவுண்டரியே கிடைத்தது. அதனால்  2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற கேகேஆர், 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் தொடர்ந்து கடைசி இடத்திலேயே உள்ளது. இனிமேல் இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற முடியாது.