ஐபிஎல் 12வது சீசனில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடந்துவருகிறது. 

இரு அணிகளுமே ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. கொல்கத்தாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பவுலிங்கை தேர்வு செய்தார். 

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரை அபாரமாக வீசிய ஷமி, அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரை பஞ்சாப் அணி அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுத்த தமிழக ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வீசினார். மாயாஜால ஸ்பின்னர் என்று அணியில் எடுக்கப்பட்ட அவரது ஓவரில் 24 ரன்களை குவித்தார் சுனில் நரைன். 

லின் 10 ரன்களிலும் நரைன் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு உத்தப்பாவும் நிதிஷ் ராணாவும் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினர். ராணா பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். இருவருமே அரைசதம் அடித்தனர். ராணா 63 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் உத்தப்பாவுடன் ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடக்கூடிய ரசலுக்கு தொடர்ச்சியாக யார்க்கர்களாக வீசி நெருக்கடி கொடுத்தனர். எனினும் 18 மற்றும் 19வது ஓவர்களில் சிக்ஸர்கள் மழை பொழிந்தார் ரசல். 

ஆண்ட்ரூ டை வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசிய ரசல், ஷமி வீசிய 19வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். கடைசி ஓவரில் ரசல் ஆட்டமிழந்தார். வெறும் 17 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களை குவித்தார் ரசல்.

ராணா - உத்தப்பா ஜோடியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் ஆண்ட்ரூ ரசலின் கடைசி நேர அதிரடியால் கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 218 ரன்களை குவித்தது. 219 ரன்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி ஆடிவருகிறது.