ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆனால் கேகேஆர் அணி பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லை. கேகேஆர் அணியின் தொடக்க வீரர் திரிபாதி 7 ரன்களிலும், நிதிஷ் ராணா 5 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆண்ட்ரே ரசலுக்கு அருமையான பவுன்ஸர் போட்டு 12 ரன்களில் வீழ்த்தினார் பும்ரா.

ரசல் அவுட்டாகும்போது, கேகேஆர் அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் வெறும்  61 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் மோர்கனும் கம்மின்ஸும் இணைந்து மிகச்சிறப்பாக ஆடி 20 ஓவர் வரை ஆடி அணியை 148 ரன்கள் எட்டவைத்து, கரைசேர்த்தனர்.

இவர்களுக்கு பின்னர் பேட்ஸ்மேன் இல்லாததால் பொறுப்புடன் ஆடினர். மோர்கனுக்கு சரியாக ஷாட்டுகள் கனெக்ட் ஆகவில்லையென்றாலும், அந்த பொறுப்பை தானே ஏற்று, பெரிய ஷாட்டுகளை பறக்கவிட்டார் கம்மின்ஸ். 18வது ஓவரின் கடைசி பந்தில் கம்மின்ஸின் கேட்ச்சை டி  காக் தவறவிட, அதை பயன்படுத்தி, அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசினார். கடைசி ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்தார். மோர்கன் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவரி 148 ரன்கள் அடித்துள்ளது.

அரைசதம் அடித்த கம்மின்ஸ் 36 பந்தில் 53 ரன்கள் அடித்தார். மோர்கன் 29 பந்தில் 39 ரன்கள் அடித்தார். 149 ரன்கள் என்பது வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை இந்தியன்ஸுக்கு எளிய இலக்கு என்பதால், மும்பை இந்தியன்ஸ் அணி கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்.