ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்த சீசனுக்கான முழு போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. 

ஐபிஎல் தொடர் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் ஆடும் லெவன் காம்பினேஷன், பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர்கள் காம்பினேஷன், ஆடும் லெவனில் இடம்பெறும் 4 வெளிநாட்டு வீரர்கள், எதிரணிகளுக்கான எதிரான வியூகங்களை வகுப்பது என படுபிசியாக உள்ளன.

இந்நிலையில், கேகேஆர் அணியின் பயிற்சியாளரான டேவிட் ஹசி, அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் 3ம் வரிசையில் இறங்கி 60 பந்துகள் பேட்டிங் ஆடினால், இரட்டை சதம் அடித்துவிடுவார் என தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல். ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஆடிவரும் அவருக்கு ஐபிஎல்லில் தனி இடம் இருக்கிறது. கடந்த சீசனில் தனி ஒருவனாக பல போட்டிகளில் அருமையாக ஆடி அசத்தினார். நல்ல உடல்வலிமை கொண்ட ஆண்ட்ரே ரசல், சில பந்துகளில் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய அளவிற்கு அதிரடி பேட்ஸ்மேன். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக அசாத்திய இன்னிங்ஸ்களை ஆடி அசத்தினார். 

கடந்த சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் பின்வரிசையில் பேட்டிங் ஆடவந்த ரசல், வெறும் 19 பந்தில் 49 ரன்களை குவித்து கேகேஆரை வெற்றி பெற செய்தார். ஆண்ட்ரே ரசல் கடந்த சீசனில் செம ஃபார்மில் தெறிக்கவிட்ட போதிலும், அவர் முன்வரிசையில்(3அல்லது4) இறக்கப்படவில்லை. அதனால் பல போட்டிகளில் அவர் அதிரடியாக ஆடி கடுமையாக போராடியபோதிலும் கேகேஆர் அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. ரசலை முன்வரிசையில் இறக்கியிருந்தால் கண்டிப்பாக கேகேஆர் அணி நிறைய வெற்றிகளை பெற்று பிளே ஆஃபிற்கு சென்றிருக்கும். இது கடந்த சீசனில் பெரும் பிரச்னையாகவே வெடித்தது. ரசல் பின்வரிசையில் இறங்கியபோதிலும், கடந்த சீசனில் 510 ரன்களை குவித்தார்.

இந்நிலையில், இந்த சீசனில் அவர் கண்டிப்பாக முன்வரிசையில் இறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுகுறித்து ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்த கேகேஆர் பயிற்சியாளர் டேவிட் ஹசி, அணிக்கு நல்லது என்றால், கண்டிப்பாக ரசலை 3ம் வரிசையில் இறக்கலாம். அவர் 3ம் வரிசையில் இறங்கி 60 பந்துகள் பேட்டிங் ஆடினால், இரட்டை சதம் அடிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. ரசல் அதிசயங்களை நிகழ்த்திவிடுவார். அவர் எங்கள் அணியின் இதயத்துடிப்பு என்று டேவிட் ஹசி புகழாரம் சூட்டியுள்ளார்.