ஐபிஎல் 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன. 

கடந்த சீசனில் கேன் வில்லியம்சனின் தலைமையில் இறுதி போட்டிவரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த முறை கடந்த முறையைவிட கூடுதல் உத்வேகத்துடன் களமிறங்குகிறது. 

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் கடந்த ஐபிஎல் சீசனில் ஆடவில்லை. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த வார்னர், கடந்த சீசனில் ஆடமுடியாமல் போனதால், கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேன் வில்லியம்சனின் கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்தது. தனது தேர்ந்த கேப்டன்சியால் அந்த அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார் வில்லியம்சன். ஆனால் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்த முடியாமல் கோப்பையை இழந்தார். 

ஆனால் வில்லியம்சனின் கேப்டன்சி அபாரமாக இருந்தது. இந்நிலையில், இந்த சீசனில் தடை முடிந்து வார்னர் அணியில் இணைந்துள்ள நிலையில், யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது. வில்லியம்சன் தான் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணியின் ஆலோசகர் லட்சுமணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வார்னர் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆற்றிய பணி அபாரமானது. ஆனால் அதேநேரத்தில் வில்லியம்சன் கடந்த சீசனில் அபாரமாக கேப்டன்சி செய்தார். அவரே கேப்டனாக தொடர்வார். வார்னர் வழக்கம்போலவே சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என லட்சுமணன் தெரிவித்துள்ளார். 

2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையை வார்னர் வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.