ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. 

நியூசிலாந்து அணியின் கேப்டனான வில்லியம்சன், தனது அபாரமான கேப்டன்சியால் கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்ததோடு சன்ரைசர்ஸ் அணியை இறுதி போட்டிவரை அழைத்து சென்றார். வில்லியம்சனின் கேப்டன்சி அந்த அணிக்கு மிகப்பெரிய பலம். இந்த சீசனிற்கு தடை முடிந்து வார்னர் திரும்பிவிட்ட நிலையிலும் வில்லியம்சன் தான் கேப்டனாக தொடர்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. 

ஆனால் காயம் காரணமாக வில்லியம்சன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அதனால் அந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் கேப்டனாக செயல்பட்டார். அந்த போட்டியில் கடைசி நேரத்தில் கேகேஆர் அணி வீரரான ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் சன்ரைசர்ஸ் அணி தோல்வியை தழுவியது. 

வில்லியம்சனின் பேட்டிங்கும் கேப்டன்சியும் இல்லாதது அந்த அணிக்கு முதல் போட்டியில் ஒரு குறையாக இருந்தது. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வில்லியம்சன் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் குணமடைந்துவிட்டதாகவும் இன்றைய போட்டியில் ஆடுவார் என்றும் தெரிகிறது. 

வில்லியம்சன் களத்திற்கு வந்தாலே அதுவே சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலம்தான். அவரது கேப்டன்சி அந்த மாதிரி. பேட்டிங்கிலும் மிரட்டிவிடுவார். எனவே இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி கூடுதல் உற்சாகத்துடன் களமிறங்குகிறது. 

சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுமே முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.