ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 3 முறை சாம்பியன்களான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. 

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் நல்ல நிலையில் உள்ளன. இந்த மூன்று அணிகளுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப், கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும்.

கடந்த சீசனில் இறுதி போட்டி வரை சென்ற சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் வார்னர் திரும்பியிருப்பது கூடுதல் பலம். மேலும் இந்த சீசனில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. அவரும் தன் மீதான நம்பிக்கையை ஏமாற்றாமல் அபாரமாக ஆடிவருகிறார். வார்னரும் பேர்ஸ்டோவும் இணைந்து சன்ரைசர்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

கேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட, வார்னரும் பேர்ஸ்டோவும் முதல் விக்கெட்டுக்கு 131 ரன்களை சேர்த்து சன்ரைசர்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வார்னர் ஆட்டமிழந்த பிறகும் அதிரடியை தொடர்ந்த பேர்ஸ்டோ 80 ரன்கள் குவித்து 15வது ஓவரிலேயே சன்ரைசர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். 

சன்ரைசர்ஸ் அணியின் மிகப்பெரிய பலமாக வார்னரும் பேர்ஸ்டோவும் திகழ்கின்றனர். ஐபிஎல்லில் இந்த சீசனில் தான் பேர்ஸ்டோ அறிமுகமானார். அறிமுக சீசனிலேயே பேட்டிங்கில் தெறிக்கவிடுகிறார். இதுவரை 9 போட்டிகளில் ஆடி ஒரு சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 445 ரன்களை குவித்து, இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் வார்னருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 

அதுமட்டுமல்லாமல் அறிமுக சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2015ம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அந்த சீசனில் 439 ரன்கள் அடித்ததே அறிமுக போட்டியில் அடிக்கப்பட்ட அதிக ரன்னாக இருந்தது. அதை முறியடித்து தற்போது அறிமுக சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பேர்ஸ்டோ படைத்துள்ளார். 

சிஎஸ்கே அணியுடனான அடுத்த போட்டியை முடித்துவிட்டு பேர்ஸ்டோ இங்கிலாந்து செல்கிறார். பேர்ஸ்டோ சீசனின் பாதியிலேயே ஐபிஎல்லில் இருந்து விலகி நாடு திரும்புவது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பு. ஆனால் உலக கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடவேண்டியிருப்பதால் இங்கிலாந்து செல்கிறார் பேர்ஸ்டோ.