ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 

2 தொடர் தோல்விகளுக்கு பிறகு, சன்ரைசர்ஸ் அணியை நேற்று எதிர்கொண்ட சிஎஸ்கே அணி, வாட்சனின் அதிரடியால் சன்ரைசர்ஸை வீழ்த்தி 8வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 11 போட்டிகளில் ஆடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. 

சன்ரைசர்ஸ் அணியுடனான இதற்கு முந்தைய போட்டியில் முதுகு வலி காரணமாக தோனி ஆடவில்லை. அந்த போட்டியில் சிஎஸ்கே அணி நிர்ணயித்த 133 ரன்கள் என்ற இலக்கை பேர்ஸ்டோவின் அதிரடி அரைசதத்தால் 17வது ஓவரிலேயே எட்டி சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு பதிலடி கொடுத்துள்ளது சிஎஸ்கே அணி. இந்த சீசனின் வெற்றிகரமான அபாரமான தொடக்க ஜோடியாக பேர்ஸ்டோ-வார்னர் ஜோடி உள்ளது. இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வார்னரும் பேர்ஸ்டோவும் தான் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். 

சன்ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் சொதப்பிவரும் நிலையில், அந்த அணி இவர்கள் இருவரையுமே பெரியளவில் சார்ந்துள்ளது. இந்நிலையில், உலக கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர் இருப்பதால் பேர்ஸ்டோ இங்கிலாந்து செல்கிறார். நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆடியதுதான் அவர் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய கடைசி போட்டி. 

தான் இங்கிலாந்திற்கு செல்வதற்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டுத்தான் செல்வேன் என்று சபதம் எடுத்திருந்தார். அவர் கூறியதை போலவே கேகேஆர் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி சன்ரைசர்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். ஆனால் அவரது பருப்பு சிஎஸ்கேவிடம் வேகவில்லை. தோனி இல்லாத கடந்த போட்டியில் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் சன்ரைசர்ஸை வெல்ல வைத்த பேர்ஸ்டோ, நேற்றைய போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார். 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் பேர்ஸ்டோவை வீழ்த்த திட்டங்கள் இல்லாமல் கேப்டன் ரெய்னா சிரமப்பட்டார். ஆனால் நேற்றைய போட்டியில் இரண்டாவது ஓவரிலேயே ஹர்பஜன் சிங்கை பந்துவீசவைத்து பேர்ஸ்டோவின் கேட்ச்சை அபாரமாக பிடித்து ரன்னே எடுக்காமல் அனுப்பிவைத்தார் தோனி. பேர்ஸ்டோவை விரைவில் வீழ்த்தியது நல்லதாக போயிற்று. இல்லையெனில் அதிரடியாக ஆடி ஸ்கோரை மேலும் உயர்த்தியிருப்பார். அது சிஎஸ்கே அணிக்கு நெருக்கடியை அதிகரித்திருக்கக்கூடும்.