ஐபிஎல் 13வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி அபாரமாக ஆடியது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணி, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வழிகாட்டுதலில் மிகச்சிறப்பாக ஆடி, இந்த சீசனில் தான் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய டெல்லி அணி, முதல் 9 லீக் போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றது. ஆனால் அதன்பின்னர் தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த டெல்லி அணி, கடைசி லீக் போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற டெல்லி அணி, முதல் தகுதிச்சுற்றில் மும்பை அணியிடம் தோற்று, 2வது தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியில், ரஹானே, தவான், அஷ்வின் ஆகிய சீனியர் வீரர்கள், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஹெட்மயர் ஆகிய இளம் வீரர்கள், ரபாடா, நோர்க்யா ஆகிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்கள் என நல்ல கலவையிலான வலுவான அணியாக டெல்லி கேபிடள்ஸ் உள்ள நிலையில், நல்ல அணி காம்பினேஷன் செட் ஆகிவிட்டதால், இன்னும் 4-5 ஆண்டுகளுக்கு டெல்லி கேபிடள்ஸ் தான் கோலோச்சும் என இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் குறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடக்கத்தில் இருந்ததைப்போலத்தான், அடுத்த 4-5  ஆண்டுகளுக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி வலுவான அணியாக ஆதிக்கம் செலுத்தி அதிக வெற்றிகளை பெறும் என நம்புகிறேன். டெல்லி கேபிடள்ஸுக்கு ஒரு நல்ல ஃபினிஷர் தேவை. ஹெட்மயரும் ஸ்டோய்னிஸும் நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட இன்னொரு நல்ல வீரர் தேவை. அதேபோல இந்தியாவோ அல்லது வெளிநாடோ ஒரு தரமான ரிஸ்ட் ஸ்பின்னர் தேவை. இந்த 2 சிக்கலையும் தீர்த்துவிட்டால், டெல்லி அணி மேலும் வலுப்பெறும் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.