ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. கேகேஆர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டன. சிஎஸ்கே அணி நாளை துபாய்க்கு புறப்படுகிறது. 

ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், டைட்டில் ஸ்பான்சர் மாறியிருப்பதால், புதிய லோகோவை வடிவமைத்து வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம். இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்னையின் விளைவாக, சீன நிறுவனமான விவோ நிறுவனத்துடனான ஐபிஎல் டைட்டில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. 

இந்த சீசனுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை, டாடா குழுமம், அன் அகாடமி ஆகிய நிறுவனங்களை வீழ்த்தி ரூ.222 கோடிக்கு ட்ரீம்11 நிறுவனம் தட்டிச்சென்றது. இந்த ஒரு சீசனுக்கு மட்டுமே ட்ரீம்11 ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஐபிஎல் 13வது சீசனுக்கான ட்ரீம்11 ஐபிஎல் என்ற புதிய லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புதிய லோகோவை, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம், புதிய லோகோ எப்படியிருக்கிறது என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளது. அதை மும்பை இந்தியன்ஸ் அணியும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.