உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடந்துவருகிறது. 

இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்பது பெரும்பாலானோரின் கணிப்பு. ஆனால் ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் வலுவான இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது. 

ஃபின்ச், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்த ஸ்மித்தும் வார்னரும் அணியில் இணைய உள்ளனர். ஸ்மித் மற்றும் வார்னருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை முடிந்து இருவரும் ஐபிஎல் தொடரில் ஆடிவருகின்றனர்.

வார்னர் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் ஆடிவருகின்றனர். ஓராண்டாக தடையில் இருந்ததால், அவர்கள் தொடர்ந்து பயிற்சியில் இருந்திருந்தாலும், போட்டிகளில் ஆடவில்லை. அதனால் அவர்களுக்கு ஐபிஎல் ஒரு நல்ல வாய்ப்பு. நல்ல ஃபார்மில் வருவதற்கு அவர்களுக்கு ஐபிஎல் நல்ல வாய்ப்பாக அமையும். 

கேகேஆர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வார்னர் 53 பந்துகளில் 85 ரன்களை குவித்தார். ஆனால் ஸ்மித், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில், இருவரும் ஐபிஎல்லில் சரியாக ஆடினாலும் ஆடாவிட்டாலும் உலக கோப்பையில் அவர்களுக்கான இடம் உறுதி. ஆனால் ஐபிஎல் அவர்களுக்கு சில போட்டிகளில் ஆடுவதற்கான இடத்தை அளித்திருக்கிறது. ஆனால் இதை பொறுத்து உலக கோப்பை வாய்ப்பு தீர்மானிக்கப்படாது. அவர்களுக்கான இடம் உறுதியான ஒன்று என்று ஹைடன் தெரிவித்துள்ளார்.