ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 

2 தொடர் தோல்விகளுக்கு பிறகு, சன்ரைசர்ஸ் அணியை நேற்று எதிர்கொண்ட சிஎஸ்கே அணி, வாட்சனின் அதிரடியால் சன்ரைசர்ஸை வீழ்த்தி 8வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 11 போட்டிகளில் ஆடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. 

இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கைவிட பவுலிங் தான் சிறப்பாக உள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியை தவிர மற்ற எந்த போட்டிகளிலும் டாப் ஆர்டர்கள் பெரியளவில் ஆடவில்லை. ஆனால் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், தீபக் சாஹர் ஆகியோரின் அபாரமான பவுலிங்கால் தான் சிஎஸ்கே அணி வெற்றிகளை பெற்றுவந்தது. 

அதிலும் குறிப்பாக இம்ரான் தாஹிரின் சுழல் பந்துவீச்சு அபாரம். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்ட தாஹிர், சிஎஸ்கே அணியின் வெற்றி நாயகனாக திகழ்கிறார். 40 வயதான இம்ரான் தாஹிர் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறவிட்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் ரபாடாவிற்கு அடுத்த இடத்திலிருக்கிறார். 

இந்நிலையில், இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தியதும் இரு கைகளையும் நீட்டிக்கொண்டு அவரது டிரேட் மார்க் கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவார். அவரது டிரேட் மார்க் கொண்டாட்டத்தை ரசிகர் ஒருவர் வரைந்து, இம்ரான் தாஹிரின் மீதான பாசத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

அதைக்கண்டு நெகிழ்ந்துபோன இம்ரான் தாஹிர், அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், சில போட்டிகளில் சரியாக பந்துவீசாததற்கு வருத்தம் தெரிவித்ததுடன் இனிமேல் சிறப்பாக வீசுவதாக உறுதியும் அளித்துள்ளார். 

சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போன்று இருக்கும் என்று அந்த அணி வீரர்கள் பலர் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்குள் குடும்ப உணர்வு இருப்பதை கடந்து, சிஎஸ்கே அணியை பொறுத்தமட்டில் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இடையேயும் சிறந்த உறவு இருந்துவருகிறது. ரசிகர்கள் - வீரர்கள் என இரு தரப்புமே பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம்தான். அதிலும் இம்ரான் தாஹிர், ரசிகர்களின் டுவிட்டுகளுக்கு உடனடியாக பதிலளித்து நெகிழவைக்கிறார். அவரது அடக்கமான பண்பிற்காகவே நிறைய ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.