ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிராஜின் பந்தை அபாரமான ஷாட்டால் ஸ்டேடியத்திற்கு வெளியே அனுப்பினார் ஹர்திக் பாண்டியா. 

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இரு அணிகளுமே முதல் போட்டியில் தோற்றதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. 

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 187 ரன்களை குவித்தது. 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 181 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியபோது ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் டி காக் 23 ரன்களில் ஆட்டமிழக்க, 48 ரன்கள் அடித்த ரோஹித், அரைசதத்தை தவறவிட்டார். பின்னர் சூர்யகுமார் யாதவும் யுவராஜ் சிங்கும் நன்றாக ஆடினர். சாஹல் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து யுவராஜ் ஆட்டமிழந்தார். 15 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 139 ரன்களை குவித்திருந்தது. ஆனால் 16 மற்றும் 17 ஆகிய ஓவர்களிலும் சேர்த்தே வெறும் 8 ரன்களை மட்டும் எடுத்ததோடு சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, குருணல் பாண்டியா ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் இழந்தது மும்பை இந்தியன்ஸ். 

அதன்பின்னர் டெத் ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து நல்ல ஸ்கோரை எட்ட உதவினார் ஹர்திக் பாண்டியா. நவ்தீப் சைனி வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாசினார். சிராஜ் வீசிய கடைசி ஓவரை பொளந்து கட்டினார் ஹர்திக் பாண்டியா. கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார். அதில் ஒரு சிக்ஸர் ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றுவிட்டது. யார்க்கர் வீச முயன்று, லெந்த்தை மிஸ் செய்தார் சிராஜ். அதை பயன்படுத்திய ஹர்திக், அந்த பந்தை வலுவாக அடித்தார். பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றது. பந்து வெளியே சென்றதும் தனது பவரை உணர்த்தும் விதமாக ஆர்ம்ஸை மடக்கி காட்டினார். ஹர்திக் பாண்டியாவின் ஷாட்டை பார்த்து கோலி திகைத்து நின்றார். அந்த வீடியோ இதோ..