ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. சிஎஸ்கே அணி கடந்த 21ம் தேதி சென்னையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றது. 

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, வீரர்கள், அணி நிர்வாகத்தினர், உதவியாளர்கள் என மொத்தம் 60 பேருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றது. அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அணியினருடன் அவர் செல்லவில்லை. ஹர்பஜன் சிங் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வார் என தகவல் வெளியானது. 

இதற்கிடையே, துபாய்க்கு சென்ற சிஎஸ்கே அணியில் நிறைய விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அணி நிர்வாகிகள், உதவியாளர்கள் என மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக விலகி இந்தியா திரும்பினார். 

இந்நிலையில், ஹர்பஜன் சிங் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி துபாய் சென்று சிஎஸ்கே அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. துபாய் கிளம்பும் முன் இந்தியாவில் 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னர் துபாய் சென்றதும் அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு 3 முறை பரிசோதனை மேற்கொள்ளப்படும். சிஎஸ்கே அணி இருக்கும் பிரச்னைகளுக்கு இடையே ஹர்பஜன் சிங் அணியில் இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

2008லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங்கை, 2018 ஐபிஎல் சீசனில், ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியில் ஆடிவரும் ஹர்பஜன் சிங், சிஎஸ்கே அணியில் தொடர்கிறார். ஐபிஎல்லில் 160 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் 11 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.