ஐபிஎல் 13வது சீசன் பாதி கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவையும், கேப்டனாக கேஎல் ராகுலையும் நியமித்து அணிக்கு புது ரத்தத்தை பாய்ச்சியது.

ஆனாலும் இந்த சீசனிலும் பஞ்சாப் அணி, இதுவரை சரியாக ஆடவில்லை. முதல் 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் சிறப்பாக பேட்டிங் ஆடி இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த டாப் 2 வீரர்களாக இருக்கும் நிலையிலும், அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதற்கு காரணம், அந்த அணியில் மற்ற வீரர்கள் சரியாக ஆடாததுதான்.

குறிப்பாக வெளிநாட்டு வீரர்களில் நிகோலஸ் பூரானை தவிர வேறு யாரும் சரியாக ஆடுவதில்லை. மேக்ஸ்வெல், நீஷம், கிறிஸ் ஜோர்டான், முஜிபுர் ரஹ்மான், ஷெல்டான் கோட்ரெல் ஆகிய அனைவருமே சொதப்புகின்றனர். இந்த சீசனில் இதுவரை யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் ஆடாத நிலையில், வயிற்றில் சிறிய பிரச்னையால் இந்த சீசனில் இதுவரை ஆடாத கெய்ல், மருத்துவமனையில் இருந்து திரும்பி முழு உடற்தகுதியை பெற்றுவிட்டதால், ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடவுள்ளார்.

தனது பழைய அணியான ஆர்சிபிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை கொண்டிருக்கும் கெய்ல், இந்த போட்டி சிறிய மைதானமான ஷார்ஜாவில் நடக்கவிருப்பதால்,  சிக்ஸர் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் கிட்டத்தட்ட வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பஞ்சாப் அணி.

ஆனாலும், பஞ்சாப் அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருப்பதாக கெய்ல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கெய்ல், இன்னும் பஞ்சாப்பிற்கு 7 போட்டிகள் எஞ்சியிருக்கின்றன. 7 போட்டிகளிலும் வெல்ல முடியும் என்று நம்புகிறேன். இது சாத்தியமே என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

எனவே ஆர்சிபிக்கு எதிராக அவர் ஆடுவது உறுதியாகியுள்ளதுடன், கண்டிப்பாக இனிவரும் போட்டிகளில் தெறிக்கவிடுவார் என்று நம்பலாம். பஞ்சாப் ஜெயிக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது.