ஐபிஎல் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்று தயாராகிவருகின்றன. ஐபிஎல் தொடங்கப்போகும் நிலையில், சிஎஸ்கேவிற்கு மட்டும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன.

சிஎஸ்கே அணி வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உட்பட அணியை சேர்ந்த மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், சிஎஸ்கே அணி பயிற்சியை தொடங்குவது தாமதமாகியுள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரும், மேட்ச் வின்னருமான சுரேஷ் ரெய்னா, அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், இந்த சீசனைவிட்டே விலகியுள்ளார். அவரை கடுமையாக விளாசி சிஎஸ்கே அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் பேசியுள்ளார். எனவே இனிமேல் சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே அணியில் ஆட வாய்ப்பில்லை.

ரெய்னா இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகியதால், அவர் இறங்கிவந்த 3ம் வரிசையில் தோனி இறங்கலாம் என்றும் இது தோனிக்கு கிடைத்த செம வாய்ப்பு என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கம்பீர், இது தோனிக்கு அருமையான வாய்ப்பு. தோனி 3ம் வரிசையில் இறங்கலாம். தோனி கடந்த ஓராண்டாக கிரிக்கெட் ஆடவில்லை. எனவே அவர் 3ம் வரிசையில் இறங்கினால் நிறைய பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 3ம் வரிசையில் ஆடுவதன் மூலம், களத்தில் நிலைத்து மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆட அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியும். தோனிக்கு இது நல்வாய்ப்பு.

அதனால், தோனி 3ம் வரிசையில் இறங்கலாம். சிஎஸ்கே அணியில் கேதர் ஜாதவ், ட்வைன் பிராவோ, சாம் கரன் என பேட்டிங் டெப்த் நன்றாக உள்ளது. எனவே இது தோனிக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. ரெய்னா இல்லாததால், 3ம் வரிசைக்கு அனுபவமான வீரர் தேவை. அது தோனி தான் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.