உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருகிறது. உலக கோப்பை அணி பரிசீலனையில் இருக்கும் வீரர்களை பரிசோதிக்க, ஐபிஎல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் ஆகியவை வலுவாக உள்ளது. தோனி ஃபார்முக்கு திரும்பியிருப்பதால் 5ம் வரிசையும் பிரச்னையில்லை. 6ம் வரிசையில் கேதர் ஜாதவ் நன்றாகவே ஆடிவருகிறார். ஆனால் 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இரண்டு இடங்களும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. 

ராயுடு நன்றாக ஆடிவந்த நிலையில், திடீரென தொடர்ச்சியாக சொதப்பியதால் அவர் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவது சந்தேகமாகியுள்ளது. இதற்கிடையே விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடிவருகிறார். விஜய் சங்கர் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டிற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. 

இவ்வாறு 4ம் வரிசை வீரர் மற்றும் மாற்று விக்கெட் கீப்பர் ஆகிய இடங்களுக்கான தேடுதல் படலம் நடந்துவரும் நிலையில், கவுதம் காம்பீர் ஓர் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன், இக்கட்டான சூழலில் களமிறங்கி, சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்ட அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி ரன்னை மளமளவென உயர்த்தினார். அவசரப்படாமல் நிதானமாக அதேநேரத்தில் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார் சாம்சன். சஞ்சு சாம்சனின் இந்த இன்னிங்ஸ், ஐபிஎல் வரலாற்றில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. 

இந்நிலையில், சஞ்சு சாம்சனையே மாற்று விக்கெட் கீப்பராக உலக கோப்பை அணியில் எடுக்கலாம் என்றும் அவரையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என்றும் காம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டுவீட் செய்துள்ள காம்பீர், நான் பொதுவாக எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் பற்றி பேச விரும்பமாட்டேன். ஆனால் சஞ்சு சாம்சனின் திறமையை பார்க்கும்போது பேசாமல் இருக்கமுடியவில்லை. சஞ்சு சாம்சன் தான் தற்போதைய சூழலில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன். உலக கோப்பையில் அவரையே 4ம் வரிசையில் இறக்கலாம் என்பதுதான் என் கருத்து என்று காம்பீர் டுவீட் செய்துள்ளார். 

காம்பீர் சொல்வது நியாயம்தான். சஞ்சு சாம்சன், ஐபிஎல், உள்நாட்டு போட்டிகள் என தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். எனினும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் என்றாலும் ஃபீல்டிங்கிலும் மிகச்சிறப்பாக செயல்படக்கூடியவர். எனவே தோனி ஆடும் போட்டிகளில் கூட சாம்சனை சேர்த்து, 4ம் வரிசையில் இறக்கலாம். ஃபீல்டிங்கிலும் மிரட்டிவிடுவார். விக்கெட் கீப்பர் என்பதால் ஃபீல்டிங்கில் சொதப்பமாட்டார். ராஜஸ்தான் அணியில் கூட பட்லர் தான் விக்கெட் கீப்பிங் செய்கிறார். ஆனால் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் அபாரமாக ஃபீல்டிங் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.