ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பை தொடர் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் நடந்துவருவதால் பல நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடிவருகின்றனர்.

நடப்பு சீசனில் இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளை பெற்று சிஎஸ்கே அணி முதலிடத்தில் உள்ளது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும்.

ஐபிஎல் 12வது சீசன் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் உலக கோப்பையில் ஆடும் மற்ற நாட்டு வீரர்கள் பலர், அதற்கு தயாராகும் விதமாக ஐபிஎல்லில் இருந்து விலகி சொந்த நாட்டுக்கு செல்ல உள்ளனர். நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணியை தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாட்டு வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர். 

உலக கோப்பையில் அணியில் இடம்பெறாத அல்லது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆடுவார்கள்.

ஐபிஎல்லில் பாதியிலிருந்து விலகி சொந்த நாட்டுக்கு திரும்பும் வீரர்கள்:

சிஎஸ்கே - டுபிளெசிஸ், இம்ரான் தாஹிர்

ஆர்சிபி - மொயின் அலி, டேல் ஸ்டெயின், மார்கஸ் ஸ்டோய்னிஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - வார்னர், பேர்ஸ்டோ, ஷாகிப் அல் ஹாசன்

மும்பை இந்தியன்ஸ் - குயிண்டன் டி காக், பெஹ்ரெண்டோர்ஃப்

டெல்லி கேபிடள்ஸ் - ரபாடா

பஞ்சாப் - டேவிட் மில்லர்

கேகேஆர் - ஜோ டென்லி

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்.

இவற்றில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்குத்தான் பெரிய பாதிப்பு. மொயின் அலி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேல் ஸ்டெயின் என இவர்கள் மூவரும் ஆர்சிபி அணியில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பு செய்துவருகின்றனர். அவர்கள் இல்லாதது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல வார்னர் - பேர்ஸ்டோ தொடக்க ஜோடியையே பெரியளவில் சார்ந்திருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் அவர்கள் இல்லாதது ஈடு செய்ய முடியாத இழப்பு. 

இந்த சீசனில் இதுவரை அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா தொப்பியை தன்வசம் வைத்திருக்கும் ரபாடா இல்லாதது டெல்லி அணிக்கு பின்னடைவுதான். அதேபோல ராஜஸ்தான் அணிக்கும் ஸ்மித் மற்றும் ஸ்டோக்ஸ் இல்லாதது இழப்பு. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, பஞ்சாப், கேகேஆர் ஆகிய அணிகள் வெளிநாட்டு வீரர்கள் இல்லாத இழப்பை ஈடு செய்யக்கூடிய திறன் பெற்றவைகளாக உள்ளன. இன்னும் உலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்படவில்லை. அது அறிவிக்கப்பட்டால், கேகேஆர் அணிக்கு ஆப்பு அடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.