பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுலின் பொறுப்பான அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கெய்ல், மயன்க் அகர்வால் ஆகியோரும் சிறப்பாக ஆடினர். 

ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி ஆடிய போட்டியில், ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை அஷ்வின் மன்கேடிங் முறையில் ரன் அவுட் செய்தார். அஷ்வின் பந்துவீசுவதற்கு முன்னதாகவே அவர் கிரீஸை விட்டு நகன்றதால் அஷ்வின் அவரை ரன் அவுட் செய்தார். அந்த போட்டியில் பட்லரின் விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. பஞ்சாப் அணி வெற்றியும் பெற்றது. அஷ்வினின் செயல் விதிப்படி சரியானதுதான் என்றும், தார்மீக ரீதியில் சரியானது அல்ல என்றும் கலவையான கருத்துகள் உலாவந்தன. அந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி நேற்று பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, 10வது ஓவரை குருணல் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தை அவர் வீசுவதற்கு முன்னதாக மயன்க் அகர்வால் கிரீஸை விட்டு வெளியேறி நின்றார். அதைக்கண்ட குருணல் பாண்டியா பந்துபோடாமல் ஸ்டம்பை அடிக்கப்போவது போல் ஏப்புக்காட்டிவிட்டு, ஆனால் ஸ்டம்பை அடிக்காமல் கெத்தாக நக்கலாக சென்றுவிட்டார். இந்த சம்பவம் அஷ்வினுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்திருந்தது. எங்களாலும் முடியும்.. ஆனால் நாங்கள் இப்படியெல்லாம் செய்யமாட்டோம் என்கிற ரீதியாக இருந்தது குருணல் பாண்டியாவின் உடல்மொழி.

மன்கேட் முறையில் எடுத்ததுமே ரன் அவுட் செய்யாமல் மயன்க் அகர்வாலை குருணல் பாண்டியா எச்சரித்ததை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் பாராட்டியுள்ளார். இந்த செயலினால் குருணல் பாண்டியா மீது மரியாதை வந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.