2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் இன்று தொடங்குகிறது. 

சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் ஆர்சிபி அணி மோதுகிறது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அதேநேரத்தில், சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இணைந்து 8 முறை கோப்பையை வென்றுள்ளன. சில அணிகள் தொடர்ந்து கோப்பையை வென்றுவரும் நிலையில், சில அணிகள் தொடர்ந்து சொதப்பிவருகின்றன. 

இதுவரை கோப்பையை வென்றிராத ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளுமே முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.

இந்நிலையில், இந்த சீசனில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிதான் வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். 

கோலியின் கேப்டன்சி குறைபாடுகள் தான், சிறந்த வீரர்களை பெற்றிருந்தும்  அந்த அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததற்கு முக்கிய காரணம். 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாக கோலி இருந்துவருகிறார். ஆனால் ஒரேயொரு சீசனில் மட்டுமே அந்த அணி இறுதி போட்டிவரை முன்னேறியது. 2017 மற்றும் 2018 ஆகிய கடந்த 2 சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.