ஐபிஎல் 12வது சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. 

முதல் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி, நேற்று டெல்லி கேபிடள்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 20 ஓவர் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்தது.

148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி சிஎஸ்கே அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். 11வது ஓவரிலேயே அந்த அணி 100 ரன்களை எட்டியது. எனினும் அதன்பிறகு கேதர் ஜாதவும் தோனியும் நிதானமாக ஆடியதால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் இலக்கை எட்டி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. 

தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. 

இந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. பிராவோ வீசிய 16வது ஓவரின் 5வது பந்து, டெல்லி கேபிடள்ஸ் வீரர் கீமோ பாலின் கால்காப்பில் பட்டது. பிராவோ மிகத்தீவிரமாக நம்பிக்கையுடனும் அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட்டில்லை என்று மறுத்துவிட்டார். அந்த பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு மேலே சென்றது. அம்பயர் மறுத்துவிட, உடனே பிராவோ, கேப்டன் தோனியிடம் ரிவியூ செய்வதற்காக பார்த்தார். ஆனால் தோனியோ, தனது இரு புருவங்களையும் உயர்த்தி, என்னப்பா என்கிற ரீதியாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார். அந்த பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு மேலே சென்றுவிடும் என்பதை நன்கறிந்ததால் தோனி அந்த ரியாக்‌ஷனை கொடுத்தார். அதைக்கண்டு பிராவோ சிரித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், அவுட்டில்லை என்பது தெரிந்தே ஜடேஜாவின் திருப்திக்காக தோனி ஒரு ரிவியூ எடுத்தார். ஆனால் அதேபோல நேற்று செய்யவில்லை.