ஐபிஎல் 12வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதின. முதல் போட்டியிலேயே ஆர்சிபியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது. 

தோனியுடன் மிகவும் நெருக்கமான வீரர் ஜடேஜா. தோனிக்கும் ஜடேஜாவிற்கு இடையேயான புரிதலும் அபாரமானது. ஐபிஎல்லில் சென்னை அணிக்காக நீண்டகாலமாக ஆடிவருகிறார் ஜடேஜா. ஜடேஜாவும் ரெய்னாவும் தோனியின் தளபதிகளாக திகழ்கின்றனர். மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா, தோனியின் வழிகாட்டுதலின்படி சரியாக செயல்படக்கூடியவர். ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஜடேஜாவின் திருப்திக்காக தோனி ஒரு செயலை செய்தார். 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையேயான போட்டி நடந்தது. யாருமே எதிர்பார்த்திராத அளவிற்கு சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின்னிற்கு பயங்கர சாதகமாக அமைந்தது. ஆடுகளத்தில் வேகமே இல்லாததோடு பந்து நன்றாக ஸ்பின்னும் ஆனது. அதனால் ஆர்சிபி அணி வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. 71 ரன்கள் என்ற இலக்கையே சிஎஸ்கே அணி 18வது ஓவரில்தான் எட்டியது. 

இந்த போட்டியில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஆகிய சிஎஸ்கே ஸ்பின்னர்கள் அபாரமாக பந்துவீசினர். இவர்கள் மூவரும் இணைந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

ஆர்சிபி அணியின் பேட்டிங்கின் போது ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பார்த்திவ் படேல் நிலைத்து நின்றார். பார்த்திவ் படேலால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் மறுமுனையில் அவர் மட்டும் அவுட்டாகாமல் இருந்தார். சேப்பாக்கம் ஆடுகளம் ஸ்பின்னிற்கு நன்றாக ஒத்துழைத்த போதிலும், ஹர்பஜனும் தாஹிரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் ஜடேஜா மட்டும் ஒரு விக்கெட்டே வீழ்த்தியிருந்தார். அவரும் அடுத்த விக்கெட்டை போட போராடினார். 

எனினும் நூழிலையில் சிலமுறை விக்கெட்டுகள் தவறியது. ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 15வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் ஒரு பந்து பார்த்திவ் படேலின் கால் காப்பில் பட்டது. அதற்கு ஜடேஜா மிகத்தீவிரமாக அப்பீல் செய்தார். அம்பயர் மறுத்ததால் அதிருப்தியும் அடைந்தார். ஆனால் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான தோனி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் அது அவுட்டில்லை என்பது தோனிக்கு தெரிந்துவிட்டது. பந்து பார்த்திவ் படேலின் பேட்டில் படவில்லை. அதேநேரத்தில் ஸ்டம்பில் படாமல் லெக் ஸ்டம்பிற்கு சற்று வெளியேயும் சற்று மேலேயும் சென்றது என்பதை தோனி கணித்துவிட்டார். எனினும் ஜடேஜாவின் நம்பிக்கைக்காக உடனடியாக ரிவியூ கேட்டார். ரிவியூவில் அது அவுட்டில்லை என தெரிந்தது. 

ரிவியூ கேட்பதற்கு முன்னதாகவே அது அவுட்டில்லை என்பது தோனிக்கு தெரிந்தும்கூட, இனிமேல் அந்த ரிவியூவை வைத்திருந்து பயனில்லை. அதற்கு, ஜடேஜாவை திருப்தியாவது படுத்தலாம் என்பதற்காக அந்த ரிவியூவை கேட்டார்.