ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில்  தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. சிஎஸ்கே அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மற்ற அணிகள் பயிற்சியை தொடங்கிய ஒரு வாரத்திற்கு பின்னரே சிஎஸ்கே பயிற்சியை தொடங்கியது.

இந்த சீசனில் சுரேஷ் ரெய்னா ஆடாத நிலையில், தோனி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார் என்பதால், ஐபிஎல்லில் அவர் ஆடுவதைக்காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், தோனி செம ஃபார்மில் இருக்கிறார் என்பது பயிற்சியிலேயே தெரிகிறது. அதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த ஓராண்டாக கிரிக்கெட் ஆடாத சிஎஸ்கே கேப்டன் தோனி, துபாய்க்கு கிளம்புவதற்கு முன், சென்னையில் நடந்த பயிற்சி முகாமில் பேட்டிங் பயிற்சி செய்தார். அப்போது ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடினார். துபாயிலும் பயிற்சியில் ஃபாஸ்ட் பவுலிங் மற்றும்  ஸ்பின் பவுலிங் ஆகிய இரண்டையுமே தெறிக்கவிட்டார் தோனி. அந்த வீடியோ செம வைரலான நிலையில்,  தற்போது மற்றொரு வீடியோ வைரலாகிவருகிறது.

துபாயில் பயிற்சியில் தோனி லெக் திசையில் தூக்கியடித்த பந்து மைதானத்தை விட்டே வெளியே சென்று தொலைந்து போனது. இந்த ஷாட், துடிப்பான பழைய தோனியை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. அந்த ஷாட்டை கண்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். அந்த வீடியோவை சிஎஸ்கே டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ இதோ..