ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளன. கேப்டன் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி நேற்று சென்னையிலிருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது. 

ஏற்கனவே ஐபிஎல்லில் 3 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி, 4வது முறையாக மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதுமட்டுமல்லாது, தோனியும் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ள நிலையில், இந்த சீசனில் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ள எதிர்பார்ப்பு வீணாகாது என்பதை பறைசாற்றும் வகையில் உள்ளது, பயிற்சியில் தோனியின் பேட்டிங். தோனி கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதிக்கு பின்னர் கிரிக்கெட் ஆடாவிட்டாலும், அவர் செம ஃபார்மில் இருக்கிறார். 

சிஎஸ்கே வீரர்களின் உடற்தகுதியை உறுதிப்படுத்தும் வகையில், சென்னையில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. அதனால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்புவதற்கு முன், கடந்த 15ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது, வலைப்பயிற்சியில் தோனி அடித்த பிரம்மாண்ட சிக்ஸர்கள், சிஎஸ்கே வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி செய்ததை தொகுத்து 59 செகண்ட் வீடியோவாக சிஎஸ்கே அணி டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. 

அதில், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, கரன் ஷர்மா ஆகியோர் பவுலிங் வீசியது, தோனியின் பேட்டிங் ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என இரண்டையுமே பொளந்துகட்டிய தோனி, பிரம்மாண்ட சிக்ஸர்களை விளாசினார். தோனி பேட்டிங் செய்த விதத்தை பார்க்கையில், ஓராண்டாக பேட்டிங் ஆடாதது போலவே தெரியவில்லை. தோனி அடித்த பிரம்மாண்ட சிக்ஸரை வலைக்கு பின்னால் நின்ற ரெய்னா, விசில் அடித்து கொண்டாடினார். 

தோனி இருக்கும் ஃபார்முக்கு கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல்லில் செம ட்ரீட் காத்திருக்கிறது.