ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியை 151 ரன்களுக்கு சிஎஸ்கே அணி சுருட்டியது. 152 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, பவர்பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. சிஎஸ்கே 24 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். ராயுடு 57 ரன்களில் அவுட்டாக, 58 ரன்கள் அடித்த தோனி, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் சாண்ட்னெர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சிஎஸ்கேவை திரில் வெற்றி பெற செய்தார். 

நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் தோனியை கிளீன் போல்டாக்கினார் ஸ்டோக்ஸ். எஞ்சிய 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 4வது பந்தை ஃபுல் டாஸாக வீசினார். ஆனால் அந்த பந்தை அம்பயர் நோ பால் என அறிவிக்க முயன்று கையை நீட்டிவிட்டார். ஆனால் ஃபுல் டாஸ் உயரமாக செல்லும் நோ பாலை லெக் அம்பயர் தான் அறிவிக்க வேண்டும்.

பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அவர் நோ பால் இல்லை. அதனால் லெக் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு மற்றொரு அம்பயர் கையை நீட்டிவிட்டார். அதனால் பிரச்னை வெடித்தது. ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது நோ பாலா இல்லையா என்பது லெக் அம்பயர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மற்றொரு அம்பயர் அவசரப்பட்டதால் பிரச்னை வெடித்தது. 

என்னதான் பிரச்னையாக இருந்தாலும் களத்திற்கு வெளியே இருக்கும் கேப்டன், அத்துமீறி மைதானத்துக்குள் நுழையக்கூடாது. தோனி ஹீரோயிசம் செய்வது போன்று களத்திற்குள் சென்று அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஐபிஎல் விதிமுறைப்படி அப்படி செய்யக்கூடாது. அதனால் போட்டி ஊதியத்திலிருந்து 50% தோனிக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மலிங்கா வீசிய கடைசி பந்து நோ பால். ஆனால் அம்பயர் கொடுக்கவில்லை. அதற்காக களத்திற்கு வெளியே இருந்து ஆர்சிபி கேப்டன் கோலி குரல் கொடுத்தாரே தவிர களத்திற்குள் செல்லவில்லை. ஏனென்றால் விதிப்படி செல்லக்கூடாது. அதேபோல அஷ்வினும் ஒருமுறை களத்திற்கு வெளியே இருந்து அதிருப்தியை காட்டினாரே தவிர மைதானத்துக்குள் செல்லவில்லை. ஆனால் தோனி வரிந்துகட்டி கொண்டு களத்திற்குள் சென்றார். அது ஐபிஎல் விதிமீறல். இதையடுத்து அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

தோனி மூன்றுமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டனாகவும் சீனியர் வீரராகவும் இருக்கலாம். அதற்காக விதிகளை மீறி அத்துமீறி செயல்படக்கூடாது.