ஐபிஎல் 12வது சீசனில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில் பார்த்திவ் படேலின் அபாரமான ரன் அவுட்டால் கடைசி பந்தில் ஆர்சிபி அணி திரில் வெற்றி பெற்றது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி, பவர்பிளேயிலேயே வாட்சன், டுபிளெசிஸ், ரெய்னா, கேதர் ஆகிய 4 விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. 

அதன்பின்னர் தோனியும் ராயுடுவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறிது நேரம் ஆடினர். எனினும் மந்தமாக ஆடிய ராயுடு, 20 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனாலும் தோனி அவ்வப்போது சிக்சரும் பவுண்டரியும் அடித்து இலக்கை நோக்கி பயணித்தார். 

கடைசி இரண்டு ஓவர்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. நவ்தீப் சைனி வீசிய 19வது ஓவரில் தோனி முதலிரண்டு பந்துகளிலும் சிங்கிள் ஓட மறுத்துவிட்டார். மூன்றாவது பந்தில் சிக்ஸரும் அந்த பந்து நோ பால் என்பதால், மறுபடியும் வீசப்பட்ட மூன்றாவது பந்தில் 2 ரன்னும் அடித்தார் தோனி. மீண்டும் நான்காவது பந்திலும் சிங்கிள் ஓட மறுத்துவிட்டார். ஐந்தாவது பந்தில் சிங்கிள் ஓட, கடைசி பந்தில் பிராவோ ஆட்டமிழந்தார். 

தோனி மூன்று சிங்கிள்களை அந்த ஓவரில் மறுத்தார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 24 ரன்களை குவித்த தோனி கடைசி பந்தை அடிக்காமல் விட்டதால் ஒரு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. ஒருவேளை 19வது ஓவரில் தோனி சிங்கிள்கள் ஓடியிருந்தால் கடைசி ஓவரில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பிருக்கிறது. 

பேட்டிங் ஆட தெரியாத அல்லது அனுபவமற்ற வீரர் மறுமுனையில் இருந்திருந்தால் தோனி சிங்கிள் ஓட மறுத்திருக்கலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த அதிரடியாக ஆடக்கூடிய பிராவோ மறுமுனையில் இருந்தும்கூட தோனி சிங்கிள் ஓட மறுத்துவிட்டார். இந்த சம்பவம் சிஎஸ்கே ரசிகர்களுக்கே கூட அதிர்ச்சியாக இருந்தது. 

எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் பெரிய ஷாட்டுகளை ஆடி சிஎஸ்கே அணியை வெற்றி பெற செய்திருக்கிறார் பிராவோ. ஆனால் பிராவோ மீது நம்பிக்கை வைக்காமல் ஒரு சிங்கிள், இரண்டு சிங்கிள் அல்ல, மூன்று சிங்கிள்களை தோனி மறுத்தது ஆச்சரியமான விஷயம்தான். 

போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, ஆடுகளம் பேட்டிங் ஆட சற்று கடினமாக இருந்தது. அந்த நிலையில், புதிதாக களத்திற்கு வந்த பேட்ஸ்மேன் பெரிய ஷாட்டுகளை ஆடுவது கடினம். அதனால் நான் களத்தில் நீண்ட நேரம் நின்றதால், நானே ஸ்டிரைக்கில் இருந்து அடிக்கலாம் என்று நினைத்து சிங்கிள் ஓட மறுத்தேன் என்று தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.