ஐபிஎல்லில் தலா 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன.

அதிலும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, இரண்டு சீசன்களில் தடை பெற்றிருந்தது. இதுவரை மொத்தம் 11 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சிஎஸ்கே அணி 9 சீசன்களில் தான் ஆடியுள்ளது. ஆனால் அதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. மொத்தம் 7 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கடந்த சீசனில் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இத்துடன் 10வது முறையாக தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, பிளே ஆஃபிற்கு முன்னேறும் ரகசியம் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் கேட்டார். 

அதற்கு பதிலளித்த தோனி, அணியின் வெற்றி ரகசியத்தை நான் வெளியில் சொல்ல முடியாது. அது வியாபார ரகசியம். அதை நான் வெளியில் சொன்னால், என்னை ஏலத்தில் எடுக்க மாட்டார்கள். ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினரின் ஆதரவு எங்களது பலம். மேலும் அணியின் சூழல் நன்றாக இருப்பதற்கு அணியின் நிர்வாக ஊழியர்களின் பணி மிக முக்கியமானது. நான் ஓய்வுபெறும்வரை இதைத்தவிர என்னால் வேறு எதையும் சொல்ல முடியாது என்று தோனி வெளிப்படையாக தெரிவித்தார்.